கைரேகை வருகை மற்றும் மேலதிக நேர ஊதியம் தொடர்பான அரசாங்க முடிவுகளுக்கு தபால் தொழிற்சங்கங்கள் உடன்பட்டால் மட்டுமே அவர்களுடன் சந்திப்பு நடத்தத் தயாராக இருப்பதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.
குறுகிய கால வேலைநிறுத்தங்கள் கூட தபால் துறைக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும்.
நீடித்த வேலைநிறுத்தங்கள் திறைசேரியை சீர்குலைத்து எதிர்கால சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
தபால் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகளை அரசாங்கம் தீர்த்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் மேலதிக நேரக் கொடுப்பனவு போதுமானதாக இல்லை அல்லது கைரேகை வருகை முறையை ஏற்க முடியாதவர்கள் வேறு இடங்களில் வேலை தேடலாம் என தெரிவித்துள்ளார்.
அஞ்சல் சேவையில் மேலதிக நேரக் கொடுப்பனவு கட்டமைப்பிலோ அல்லது கைரேகை வருகை முறையிலோ மேலும் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாது என்று மீண்டும் உறுதிப்படுத்தினார்.
19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை முதல் நாடளாவிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். இதன் விளைவாகத் அஞ்சல் நிலையங்களில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் தேக்கமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.