சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நடைபெற்ற 45வது சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில் சாட் நாட்டைச் சேர்ந்த முஹம்மத் ஆதம் முதலிடத்தைப் பெற்று, ஐந்து இலட்சம் சவூதி ரியால்களை வென்றுள்ளார்.
புனித குர்ஆனை மனனம் செய்தல், ஓதுதல் மற்றும் தப்சீர் (விளக்கம் அளித்தல்) ஆகியவற்றுக்கான மன்னர் அப்துல்அசீஸ் சர்வதேச அல்-குர்ஆன் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 26 வரை மக்காவில் நடைபெற்றது. இரண்டு புனித தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மானின் வழிகாட்டலில் நடந்த இப்போட்டியில் 128 நாடுகளைச் சேர்ந்த 179 போட்டியாளர்கள் கலந்து கொண்டு ஐந்து பிரிவுகளில் போட்டியிட்டனர்.
இப்போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை 4 மில்லியன் சவூதி ரியால்களாகும்.
ஐந்து பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் வருமாறு:
முதல் வகை: தப்சீருடன் முழு குர்ஆன் மனனம்
1ம் இடம்: முஹம்மத் ஆதம் முஹம்மத் – சாட் (500,000 ரியால்கள்)
2ம் இடம்: அனஸ் பின் மஜித் அல்-ஹஸ்மி – சவூதி அரேபியா (450,000 ரியால்கள்)
3ம் இடம்: சனுசி புகாரி இத்ரிஸ் – நைஜீரியா (400,000 ரியால்கள்)
இரண்டாம் வகை: தஜ்வீத்துடன் முழு குர்ஆன் மனனம்
1ம் இடம்: மன்சூர் பின் முதாப் அல்-ஹர்பி – சவூதி அரேபியா (300,000 ரியால்கள்)
2ம் இடம்: அப்துல்வதூத் பின் சாதிரா – அல்ஜீரியா (275,000 ரியால்கள்)
3ம் இடம்: இப்ராஹிம் கைருதீன் முஹம்மத் – எத்தியோப்பியா (250,000 ரியால்கள்)
மூன்றாம் வகை: குர்ஆனின் 20 ஜுஸ்கள் மனனம்
1ம் இடம்: முஹம்மத் தமாஜ் அல்-ஷுவை – யெமன் (200,000 ரியால்கள்)
2ம் இடம்: முஹம்மத் முஹம்மத் கோசி – சாட் (190,000 ரியால்கள்)
3ம் இடம்: பத்ர் ஜாங் – செனகல் (180,000 ரியால்கள்)
4ம் இடம்: முஹம்மத் அமீன் ஹசன் – அமெரிக்கா (170,000 ரியால்கள்)
5ம் இடம்: முஹம்மத் கமால் மான்சி – பாலஸ்தீனம் (160,000 ரியால்கள்)
நான்காம் வகை: குர்ஆனின் 10 ஜுஸ்கள் மனனம்
1ம் இடம்: நஸ்ர் அப்தெல் மஜீத் அமர் – எகிப்து (150,000 ரியால்கள்)
2ம் இடம்: பயோ விப்சோனோ – இந்தோனேசியா (140,000 ரியால்கள்)
3ம் இடம்: தாஹிர் படேல் – லா ரீயூனியன் தீவு (130,000 ரியால்கள்)
4ம் இடம்: யூசுப் ஹசன் ஒஸ்மான் – சோமாலியா (120,000 ரியால்கள்)
5ம் இடம்: பூபக்கர் டிகோ – மாலி (110,000 ரியால்கள்)
ஐந்தாம் வகை: குர்ஆனின் 5 ஜுஸ்கள் மனனம் (இளம் வயதினர்)
1ம் இடம்: அன்வா இன்டரத் – தாய்லாந்து (65,000 ரியால்கள்)
2ம் இடம்: சலாஹுதீன் ஹுஸாம் வசானி – போர்ச்சுகல் (60,000 ரியால்கள்)
3ம் இடம்: சாய்ங் வானா சோ – மியான்மர் (55,000 ரியால்கள்)
4ம் இடம்: அப்துல்ரஹ்மான் அப்துல் முனிம் – போஸ்னியா & ஹெர்சகோவினா (50,000 ரியால்கள்)
5ம் இடம்: அனிஸ் ஷாலா – கொசோவோ (45,000 ரியால்கள்)
இந்நிகழ்வில் உரையாற்றிய இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும் வழிகாட்டுதல் அமைச்சர், போட்டியாளர்களின் சிறப்பான திறமையைப் பாராட்டி, இந்தப் போட்டிக்கு ஆதரவளித்த மன்னர் சல்மான் மற்றும் இளவரசர் முகம்மத் பின் சல்மானுக்கு நன்றி தெரிவித்தார்.
அவர் மேலும்,இந்தப் போட்டி நாட்டின் புனித குர்ஆனுடனான தொடர்பை வலுப்படுத்துவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதை மனப்பாடம் செய்பவர்களைக் கௌரவிப்பதற்கும், இஸ்லாத்திற்கும் குர்ஆனுக்கும் சேவை செய்வதற்கும், மிதமான தன்மையைப் பரப்புவதற்கும் ராஜ்ஜியத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கிறது என்று அவர் வலியுறுத்தினார்.