இந்த ஞாயிற்றுக்கிழமை போயா தினத்தன்று (செப்டம்பர் 7) இரவு வானத்தில் பூரண சந்திர கிரகணம் நிகழவுள்ளது. சந்திரனை கடும் சிவப்பு நிறமாக மாற்றும் ஒரு அற்புதமான ‘குருதி நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கவிருக்கிறது.
கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறைத் தலைவரும் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன கூறுகையில், இது இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் ஆகும், இது உலக சனத் தொகையில் கிட்டத்தட்ட 85% பேருக்குத் தெரியும். இந்த நிகழ்வின் தெளிவான காட்சிகளை இலங்கையில் அவதானிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
கிரகணம் இரவு 8.58 மணிக்கு ஆரம்பமாகும். அதைத் தொடர்ந்து இரவு 9.57 மணிக்கு பகுதியளவான கிரகணம் ஏற்படும். முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங்கி இரவு 11.42 மணிக்கு உச்சத்தை அடையும், செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 12.22 மணி வரை இது நீடிக்கும். பகுதியளவான தேயும் கட்டம் அதிகாலை 1.26 மணிக்கு முடிவடையும். முழு நிகழ்வு 5 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடிக்கும்.
சூரியனுக்கும் பூரண சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்லும் போது, அதன் நிழல் விழுந்து, சந்திரனின் வெண்மையான ஒளியை சிவப்பு நிறமாக மாற்றுவதனால் குருதி நிலவு ஏற்படுகிறது என பேராசிரியர் ஜெயரத்ன தெரிவித்தார்.
வானிலை சீராக இருந்தால் ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் இந்தக் கிரகணம் தெரிய வாய்ப்புள்ளது.