சேர் ராஸிக் பரீத் ஒரு முடிசூடா மன்னன்:அவர் வரலாற்றை இளம் பரம்பரையினர் படிக்க வேண்டும்-அஷ்ஷைக் பளீல் நளீமி

Date:

முஸ்லிம் சமூகத்தின் தலைவர்களில் சேர் ராஸிக் பரீத் மிகவுமே வித்தியாசமான ஆளுமை படைத்த ஒருவராவார். அவர் அரசியல், பொருளாதாரம் ,கல்வி போன்ற மிக முக்கிய துறைகளில் முஸ்லிம் சமூகத்தை எழுச்சியடையச் செய்ய தனக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட சகல வளங்களையும் பயன்படுத்தினார்.

02.09.2029 ம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் “அல்அஸ்லாப்” அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சேர் ராஸிக் பரீத் பற்றிய சிறப்புரையை நிகழ்த்தும் போது ஜாமிஆ நளீமிய்யா கலா பீடத்தின் இஸ்லாமிய கற்கைகள் பீட பீடாதிபதி அஷ்ஷைக் பளீல் (நளீமி) இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரை நிகழ்த்திய அஷ்ஷைக்.பளீல் அவர்கள்,

சேர் ராஸிக்கிடம் அபார ஆற்றல்கள்,ஆழமான சமூக உணர்வு, தூரநோக்கு, தலைமைத்துவத்துக்குத் தேவையான பண்புகள், சன்மார்க்கப் பற்று,பரந்த மனப்பாங்கு,கொள்கையில் பற்றுறுதி, தேசாபிமானம் போன்ற அரிய பண்புகள் இருந்ததால் சமூகமும் அரசாங்கங்களும் பல வகையான பொறுப்புக்களையும் அவருக்கு வழங்கியிருந்தமை ஒரு விசேட அம்சமாகும்.

ராஸிக் பரீத் சிறுவராகவும் இளைஞராகவும் இருந்த காலப் பிரிவில் வீட்டுச் சூழலிலும், தான் கல்வி பயின்ற இடங்களிலும் பெற்ற அறிவும் அனுபவமும் சிறந்த அடித்தளம் கொண்ட குடும்பப் பின்னணியும் பிற்காலப் பிரிவில் பல வித்தியாசமான பொறுப்புக்களையும் பதவிகளையும் வகிப்பதற்கும் சமூகத்தின் தலைவராக மாறுவதற்கும் அவரை தகுதிப்படுத்தியமை அவரின் மற்றொரு சிறப்பாகும்.

கல்வி, அரசியல், சமூக சேவை போன்ற துறைகளில் முஸ்லிம் சமூகத்தினது மாத்திரமன்றி முழு நாட்டினதும் முன்னோடியாக இன்றும் பெருமையோடு பேசப்படுபவராக ராஸிக் பரீத் திகழ்கிறார்.

அவர் பல இலட்சியங்களை தனக்காக வரித்துக் கொண்டு செயல்பட்டார். அவையாவன,
இலங்கையின் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாகவும், உயர்ந்த வாழ்க்கை தரத்தோடும் கல்வி மேம்பாட்டோடும் வாழ வேண்டும்.

குறிப்பாக முஸ்லிம் சமூகம் கல்வி, அரசியல், மார்க்கம், பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளில் மிகவும் வீழ்ச்சி நிலையில் இருப்பதனால் அந்த நிலையில் இருந்து அதனை மீட்டெடுக்க வேண்டும்.

முஸ்லிம்கள் பிறரை குறை கூறாமல் முதலில் தமது மனப்பாங்குகள், நடத்தைகள், வாழ்க்கைப் போக்குகள் என்பவற்றை மாற்றிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் ஒவ்வொரு அமைப்பிலும், சபையிலும், சட்ட சமூக மன்றங்களிலும் இணைய வேண்டும்.அவர்கள் எதற்கும் பின்வாங்க கூடாது.

சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பல இடங்களில் புறக்கணிக்கப்படுவதனால் அவர்களது தனித்துவத்திற்கு ஏற்ப அவர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதுபோன்ற அம்சங்களைக் கருத்திற் கொண்ட நிலையில் அவரது வேலைத் திட்டங்கள் அமைந்திருந்தன.

அவர் பின்வரும் பொறுப்புக்களை வகித்தார்;-
1. முஸ்லிம் – சிங்கள கலவரம் நடந்து கொண்டிருந்த போது 1915ல் கொழும்பு நகர காவற்­
ப­டையின் முஸ்லிம்களுக்கான பிரிவில் லெப்­டினனாக நியமிக்கப்பட்டார்.

இது அவரது சமூக மற்றும் வீர உணர்வுக்கான எடுத்துக்காட்டாகும்.

2. 1930ல் கொழும்பு மாநகர சபையின் New Bazar ward பகுதிக்கான உறுப்பினராக அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.

குறிப்பாக கொழும்பு பிரதேச மக்களது அடிமட்ட பிரச்சினைகளை மிக ஆழமாக அணுகி அவர்களோடு மிக நெருக்கமான உறவைக் கொண்டு இருந்தமைக்காக அவர் மீது அவர்கள் கொண்டிருந்த அபிமானத்திற்கான பரிசாக இந்த தேர்தல் வெற்றியை குறிப்பிட முடியும்.

3. 1936 ல் பிரித்தானிய அரசினால் அரச சபை( State Council) க்கு தெரிவு செய்யப்பட்டு 1947 வரை அதன் உறுப்பினராக இருந்தார்.

இக்காலப் பிரிவில் தனக்கு கிடைத்த இப்பதவியை பயன்படுத்தி அவர் நாட்டுக்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கும் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை.

4. 1947 ல் பாராளுமன்ற Senator (மேலவை உறுப்பினர்) ஆக தெரிவு செய்யப்பட்ட அவர் இப்பொறுப்பை 1952 வரை வகித்தார். பாராளுமன்றத்தில் இக்காலப் பிரிவில் அவர் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்தார்.

அவர் மற்றவர்களை விட பல வகையிலும் வித்தியாசப்படும் வகையில் நாடாளுமன்ற பேச்சுக்களையும் விவாதங்களையும் அமைத்துக் கொண்டார்.

இன்றும் கூட அவை பொன்னெழுத்துக்களால் பொறிக்க வேண்டிய அளவுக்கு முன்மாதிரியானவையாக அமைந்திருந்தமையால் தனியான நூல்களாக தற்போது தொகுக்கப்பட்டுள்ளமை ஒரு புறம் இருக்க அவை காலாகாலமாக முன்மாதிரியான பேச்சுக்களாகவும் கணிக்கப்படுகின்றன.

5. அவரது நாவன்மைக்காக ‘வெள்ளி நாவு’ (Silver Tongue) கொண்டவர் என்றும் அவர் புகழப்பட்டதுண்டு.

6. பாகிஸ்­தா­னுக்கான இலங்கை உயர்ஸ்­தா­னி­க­ராகவும் ஈராக் மற்றும் ஈரானுக்கான தூதுவராகவும் அவர் இருந்து இராஜதந்திர விவகாரங்களிலும் தேசத்திற்காக பங்களிப்புச் செய்தார்.

சேர்.ராஸிக் எந்த சமூகத்தினரதும் எழுச்சி கல்வி மேம்பாட்டில் தங்கி இருகிறது என்பதை ஆழமாக நம்பினார். அறிவீனம் என்பது சமூகத்தில் பல்வேறுபட்ட சிக்கல்களைக் கொண்டு வரும் என்பது அவரது நிலைப்பாடாக இருந்தது.

முஸ்லிம் பெண்களது கல்வி வளர்ச்சி மூலம், சமூகம் உயர்ச்சி காணுமென்றும் கருதிய அவர் கொழும்பில் பம்பலப்பிட்டியில் முஸ்லிம் மகளிர் கல்லூரியை உருவாக்கினார். அதேபோன்று முஸ்லிம் மாணவியருக்கான பாடசாலைகளை அகுரணை, திஹாரிய, கஹட்டோவிட்ட போன்ற இடங்களிலும் அவர் அமைத்தார்

அந்தவகையில் சுமார் 280 க்கும் அதிகமான முஸ்லிம் பாடசாலைகள் அவரால் அமைக்கப்பட்டன.

அவர் இப்பணிக்காக செய்த தியாகங்களுக்காக தற்போதும் கூட பல பாடசாலைகள் அவரது நாமம் பொறிக்கப்பட்டு மட்டக்குளி, பண்டாரவளை போன்ற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம் ஆசிரியர் நியமன விடயத்திலும் ஆர்வமாகப் பணி செய்தார். முஸ்லிம் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்களே நியமிக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய ராசீக் பரீத், முஸ்லிம் ஆசிரியர்களின் பயிற்சிக்கான ஆசிரியர் கலாசாலைகளை , அளுத்கமை அட்டாளைச்சேனை ஆகிய இடங்களில் உருவாக்கினார்.

இவரது முயற்சியால் அரபுக் கல்வி அதிகாரிகள் நியமனம் பெற்றனர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் அரபு மொழித் துறைக்கான தனியான பிரிவு இவரது முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. அரசினர் பாடசாலைகளில் அரபி பாடத்திற்கான தனியான பாடவிதானம் இவரது காலப்பிரிவில் தயாரிக்கப்பட்டது.

இலங்கை சுதேச மருத்துவ கல்லூரியில் முஸ்லிம்களின் பரம்பரை மருத்துவ முறையான யூனானி பிரிவை மூடிவிட, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவரது முயற்சியால் அது பாதுகாக்கப்பட்டது.

அவரது முயற்சியினால் அரபு ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சிங்­க­ளத்தை அரச கரு­ம­ மொ­ழி­யாக்கும் சட்­டத்தை பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் முன்வைத்த போது அவர் அதனை வர­வேற்­றமை ஒருவகையில் சிலரது விமர்சனத்திற்கு உள்ளாகியது.

முன்னாள் பிர­த­மர்­க­ளான டீ.எஸ். சேனா­நா­யக்க, டட்லி சேன­நா­யக்க, சேர் ஜோன் கொத்­த­லா­வல, எஸ்.டபிள்யூ. ஆர்.டீ. பண்­டா­ர­நா­யக்க, ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்க போன்­றோ­ருடன் மிகச் சிறந்த நல்­லு­றவைப் பேணி­வந்தார்.

பிரதமர் தஹநாயக்க (1959-1960) ராஸிக் பற்றி

“ராஸிக் பரீத் எவ்வித சந்தேகமும் இன்றி இலங்கையின் சோனகர்களது ‘முடிசூடா மன்னன்’ ஆவார்.அவர் சாதாரண மக்களையும் அவர்களது சிரமங்களையும் நன்கு விளங்கியிருந்தார்.”என்று கூறியமை அவர் பற்றிய அவரது மனப் பதிவைக் காட்டுகிறது.

S.W.R.D. பண்டார நாயக்க ராசிக் பரீத் பற்றி கூறும்போது,
“நான் அவரை முஸ்லிம்களது தலைவராக மட்டுமல்லாமல் இலங்கையின் மேன்மையான தலைவர்களில் ஒருவராகவுமே கணிக்கிறேன்.”

பிரதமர் R.பிரேமதாஸா
“அவர் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்நாட்டின் பொது வாழ்வில் ஒரு முக்கியமான இடத்தை வகித்து வந்துள்ளார். அவர் எப்போதும் இலங்கையின் உண்மையான மைந்தனாகத் திகழ்ந்தார்; பிரிவினைச் சிந்தனைகளை விட தேசிய நலனையே எப்போதும் மேலோங்க வைத்தவர். சமூக ஒற்றுமையும் தேசிய ஒருங்கிணைப்பும் என்பன அவர் இடைவிடாமல் ஆதரித்து வந்த காரியங்களாகும்.’ என்றார்.

சேர்.ராஸிக்கின் சமூக சேவைகள்

கொழும்பு கோட்டையில் சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் (MICH) ஐ நிறுவிய அவர் 1939 ஆண்டு முஸ்லிம் அரசியல் மாநாட்டையும் ஆரம்பித்தார்.

தன்­ன­ல­மற்ற சேவை­யி­னூ­டாக, பொது­வாக வறிய மக்கள் வாழ்ந்த கொழும்பு நகரின் பின்­தங்­கிய பிர­தே­சங்­களில் அவர் மகப்­பேற்று நிலை­யங்­க­ளையும் மருத்­து­வ­ ம­னை­க­ளையும் நிறு­வினார்.

அவர் நாட்டின் தூரப் பிர­தே­சங்­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு, ஓரங்­கட்­டப்­பட்டு, துரு­வப்­ப­டுத்­தப்­பட்டு வாழ்ந்த முஸ்­லிம்­களின் கஷ்ட நிலையை பற்றி பேசி­யி­ருக்­கின்றார்.குரல் எழுப்ப சக்­தி­யற்­றி­ருந்­த­வர்­க­ளுக்­காகவும் அவர் குரல் கொடுத்தார்.

கால­னித்துவக் காலத்­தி­லி­ருந்து சுதந்­தி­ரத்­திற்குப் பின்­ன­ரான காலத்­தி­னூ­டாக தேசிய நல்­லி­ணக்­கத்­திற்­காக அவர் பாடு­பட்ட அதே­ வே­ளையில், தான் சார்ந்த சமூ­கத்தின் தனித்­துவ அடை­யா­ளத்­தையும் கலா­சார விழு­மி­யங்­க­ளையும் பேணிப்­ பா­து­காப்­ப­திலும் அதிக கவனம் செலுத்­தினார்.

1948 ஆம் ஆண்டு மக்கா பயணித்த அவர் ஹஜ் கடமையை முடித்ததற்கு பின்னர், ஈராக், எகிப்து, சிரியா போன்ற நாடுகளுக்கும் சென்றார்.

ஐக்கிய ராஜ்ஜியத்துக்கான பயணத்தின் பொழுது பல பிரமுகர்களை அவர் சந்தித்திருக்கிறார். இதுபோன்ற இன்னும் பல வெளிநாட்டுப் பயணங்களால் அவரது பார்வை விசாலமானதுடன் முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களிலும் இன்னும் முழு வீச்சோடு ஈடுபடுவதற்கான உந்துதலை அவை அளித்தன.

அவர் ஒரு அரசியல்வாதியாக, சமூக சேவகராக இருந்த அதே நேரத்தில் அழகுணர்ச்சி கொண்டவராகவும் விளங்கினார். எப்போதும் தனது மேலங்கியில் ஓகிட் மலரை குத்தியிருந்தமை இதற்கான சான்றாகும்.

அவர் சிறந்த விளையாட்டு வீரராகவும் விளங்கினார். கொழும்பை மையமாகக் கொண்டிருந்த Kennal club, Turf club, Orchid club, Poltry club போன்றபல கிளப்புகளில் அவர் அங்கத்துவம் பெற்றிருந்தமை இதற்கான சான்றுகளாக குறிப்பிட  முடியும். குதிரைச் சவாரியிலும் அவர் ஆர்வம் காட்டினார்.

சமூத்தின் எழுச்சிக்காக தனது முழு வாழ்வையும் அர்ப்பணித்த முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த அவருக்கு ‘சேர்’ என்ற கெளரவப் பட்டம் பிரித்தானிய அரசால் 1952ல் வழங்கப்பட்டது.

மிக ஆழமான தடயங்களைப் பதித்த நிலையில்,தனது 91 ஆம் வயதில் ,1984 ஆம் ஆண்டு அவர் வபாத்தானார். அன்னாரது அமல்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக !

இவ்வாறு அஷ்ஷைக் பளீல் பெருந் தலைவர் மர்ஹூம் ராஸிக் பரீத் நினைவுரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் சபாநாயகர் எச்.எஸ்.இஸ்மாயில் அவர்கள் பற்றிய நினைவுரையை பேராசிரியர் அனஸும் முன்னாள்அமைச்சர்.

ஏ.எச்.எம். அஸ்வர் பற்றிய நினைவுரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீனும் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலேயே தங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி

2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதிக்கு முன் உரிய ஆவணங்கள் இன்றி...

பகிடிவதை: கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 15 பேர் கைது!

கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை செய்த...

ஜனாதிபதி அநுர தலைமையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய மீலாத் தின நிகழ்வு

தேசிய மீலாதுன் நபி தின நிகழ்வு  நாளை செப்டம்பர் 5 அன்று...

கொழும்பின் சில பகுதிகளுக்கு 09 மணிநேரம் நீர்வெட்டு

கொழும்பு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 09 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...