தமிழ்நாடு தோப்புத்துறையில் மீலாது நபியை முன்னிட்டு தோப்புத்துறையில் ஹஜ்ரத் ஷெய்கு அப்துல் காதிர் (வலி) தர்ஹா பரிபாலன சங்கம் சார்பில் ‘மீலாது நல்லிணக்க ஊர்வலம் ‘ நடைபெற்றது.
இவ்வூர்வலத்தை மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்.
ஜமாத் மன்ற தலைவர் முஹம்மது ஷாபி, இந்து நற்பணி மன்ற தலைவர் சோம வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பேசும்போது, நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் பிறந்த இவ்வாண்டுடன் 1500 வருடங்கள் ஆகிறது.
நபிகள் நாயகம் அவர்கள் எங்கேயும் தன்னை முன் நிறுத்தாமல், இறைவனின் தூது செய்தியை முன்னிறுத்தினார்கள்.
தங்களுடைய தோழர்களிடமும் அந்த செய்திகளை எடுத்துரைக்குமாறு கூறினார்கள்.
நபிகளார் தன்னுடைய உருவத்தை வரைய சொல்லவில்லை. அதை வணங்க சொல்ல வில்லை. தனக்கு பிறந்தநாள் கொண்டாடுங்கள் என்று சொல்லவில்லை. தான் கூறும் கொள்கைகளை எடுத்துச் சொல்லுங்கள் என்றுதான் கூறினார்கள்.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய துணை கண்டத்தில் சிறுபான்மையினராக முஸ்லிம்கள் வாழ்வதால், பிற மக்களிடம் நபிகள் நாயகத்தை அறிமுகப்படுத்துவதற்காகவும் அவர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறுவதற்காகவும் இது போன்ற மீலாது விழாக்கள் முன்னெடுக்கப்படுகின்றன
இதன் மூலம் ஒரு நல்லிணக்கமும், புரிதலும் உருவாக்கப்படுகிறது . ரபியுல் அவ்வல் எனப்படும் இந்த வசந்தகால மாதத்தில் நபிகள் நாயகம் கூறிய செய்திகளை நம்மோடு சுற்றி வாழும் ,பிற சமூக மக்களிடமும் எடுத்துரைக்க வேண்டும்.
அதற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் பயன்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இன்றைய ஊர்வலத்தில் மாணவ ,மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனர்.
சகோதர சமூகங்களை சேர்ந்த குடும்பங்களின் பிள்ளைகளும் உற்சாகமாக இதில் பங்கேற்றனர். ஊர்வலத்துக்கு பின்னே இரு சக்கர வாகனங்கள் ஆட்டோ மற்றும் கார்களிலும் மக்கள் வந்தனர்.
வழியெங்கும் ஆங்காங்கே இந்து நற்பணி மன்றம் மற்றும் பல தன்னார்வ அமைப்புகளின் சார்பில் இனிப்புகளும், குளிர்பானங்களும் வழங்கப்பட்டது.
ஊர்வலத்தின் இறுதியாக மீலாது கமிட்டியின் வேண்டுகோளை ஏற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆம்புலன்ஸ் சேவையும் வழங்கப்பட்டது.