ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை நாடு திரும்பினார்.
செப்டெம்பர் 27 ஆம் திகதி ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்த ஜனாதிபதி, ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற “எக்ஸ்போ 2025” கண்காட்சியில் இலங்கை தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட பல இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஜனாதிபதி பங்கேற்றதுடன், ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா (Shigeru Ishiba), ஜப்பானிய நிதி அமைச்சர் கதோ கசுனொபு(KATO Katsunobu), பாதுகாப்பு அமைச்சர் டி.எம் நகடானி(DM Nakatani), நிப்பொன் மன்றத்தின் ஆரம்பத் தலைவர் யொஹெய் சசகாவா(Yohei Sasakawa) மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் (JICA) தலைவர் டனாகா அகிஹிகோ (Dr. TANAKA Akihiko) உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன.
ஜப்பானின் முன்னணி வர்த்தகர்களுடன் வட்டமேசை கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஜனாதிபதி, ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் (JETRO) தலைமையகத்தில் நடைபெற்ற ஜப்பான்-இலங்கை வர்த்தக மன்றத்திலும் இணைந்துகொண்டதுடன், இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தற்போது இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள முதலீட்டுக்கு உகந்த சூழல் குறித்தும் விளக்கமளித்தார்.
ஜப்பான்-இலங்கை அபிவிருத்தி ஒத்துழைப்பில் ஒரு புதிய மைல்கல்லை குறிக்கும் வகையில், பால் உற்பத்தித் துறையில் செயற்திறனை மேம்படுத்தும் திட்டத்திற்கான(Project for the Enhancement of Productivity in the Dairy Sector) ஒப்பந்தத்தில் (Grant Agreement) கைச்சாத்திடும் நிகழ்வும் ஜனாதிபதியின் விஜயத்துடன் இணைந்த வகையில் மேற்கொள்ளப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இந்த விஜயத்தில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இணைந்துகொண்டனர்.