அதிமேதகு அனுர அவர்களுக்கு…
புத்தளத்தின் ஆன்மாக்கள் எழுதிக்கொள்வது…!
எங்களில் ஒருவராக, உங்களை எதிர்பார்த்து வாக்களித்த மக்கள்…
அதே விரல்களால் நெஞ்சில் நெருப்போடு எழுதிக்கொள்வது…!
உங்கள் Budget இல் வைக்கப்பட்டிருக்கும் எங்களுக்கான அணுகுண்டை அவதானித்த அதிர்ச்சியில்…
அழுத விழிகளோடு எழுதிக்கொள்வது…!!
250 கோடியை எங்கள் இதயத்துக்கு எதிராக ஒதுக்கியிருக்கிறீர்கள்…!
உலகிலே தோற்றுப்போன ஒரு Land fill திட்டத்தை மீண்டும் எம் முதுகிலே கட்டியிருக்கிறீர்கள்…!
முதல் முதலாய் இன்று,
எங்கள் மனதுக்குள் மரித்திருக்கிறீர்கள்…!
மக்கள் மனதைப் புரிந்துகொள்ளாத ஒரு சராசரி அரசியலை…
நாம் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை…!
சந்ததி காக்கும் சரித்திரப் போராட்டத்தை…,
செவிடர்கள்போல் கடந்த, ஒரு சம்பிக்க ரணவக்கவாக நாம் உங்களை கற்பனை செய்யவில்லை…!
நம்பினோம்…
உங்களிடம் நீதியை எதிர்பாத்தோம்…!
நீங்கள் வித்தியாசமானவர் என பலரோடு விவாதித்தோம்…!
இன்று உங்கள் பரிசைப் பார்த்து பரிதவித்து நிற்கிறோம்…!
புத்தளம் கொழும்பு முகத் திடலில்…
“அடுத்த Budget இல் உங்களுக்கு அதிநவீன ஆஸ்பத்திரி” என்றீர்கள்…
அது இதுதானா…?
மருத்துவத்தை எதிர்பார்த்தோர்க்கு…
இந்த நோயை திணிப்பது உங்கள் உள்ளத்தை உறுத்தவில்லையா…?
இல்லை…
இருக்கும் சீமெந்துப் புகையும், அனல்மின்சார அழிவுக் கழிவும்…
இந்த மண்ணுக்கு இன்னும் போதவில்லை என நினைக்கிறீர்களா…?
அதிபரே…
இந்த மண்ணுக்கு துரோகங்கள் புதிதல்ல….!
போலி வாக்குறுதிகளும், பொறுப்பற்ற புறக்கணிப்புகளும் பார்த்திராதவையும் அல்ல…!
ஆனால் அதை…
உங்களிடம் இருந்து நாம் எதிர்பார்க்கவில்லை…!!
ஆச்சரியமாக இருக்கிறது…
இந்த திட்டத்தை முன் நின்று எதிர்த்த சிலர்… இன்று முன்னின்று நடத்துகிறார்கள்…..!!
பணத்துக்கு பிணமாகவோ…
தங்கள் பதவிக்கு விலையாகவோ எம்மை விற்கத் துணிந்திருக்கிறார்கள்…!
ஏழையாக இருந்தபோது எதிர்த்தவர்கள்…
உங்கள் MP யாக வந்ததும் எல்லாம் சரி என்கிறார்கள்…!
பிரதமருக்கு தன் தோழியைத் தெரியவில்லை…
ஜிஹான் MP க்கு அவர் கடந்த காலம் நினைவிலில்லை…!
ஜனாதிபதியவர்களே…
போதைக்கெதிரான உங்கள் போராட்ட குணம்…
இந்த அநியாயத்துக்கு எதிராக மட்டும் எப்படி இல்லாமல் போனது…?
ஊழலுக்கெதிராக உங்கள் உயர்ந்த கரம்…
இந்த நஞ்சுக்கு மட்டும் எப்படி நாகங்களை வைத்துப் பாலூட்டுகிறது…?
“இந்த நாட்டின் சந்ததிக்கு ஒரு தந்தையாக இருந்து யோசிக்கிறேன்..” என்ற நீங்கள்…
ஏன் புத்தளத்தை மட்டும் விதிவிலக்காய் விட்டுவிட்டீர்கள்…?
இத்திட்டத்தை நிறுத்துங்கள்…!
காலம் கடந்து வெடிக்கும் இந்த விஷ குண்டை செயலிழக்கச் செய்யுங்கள்…!
குப்பைகள் செல்வமாகப் பார்க்கப்படும் காலத்தில்…
அவற்றை காசுசெலவழித்துப் புதைக்கச்சொல்லும் காட்டுவாசிகளை களைபிடுங்குங்கள்..!!
‘கொழும்பு குப்பை’க்கு அல்ல…
நிச்சயம் இது ‘உலகக் குப்பை’க்கான கூடாரம்..!
உங்களுக்குள் மறைந்திருக்கும்…
ஊழல் ஏஜென்ட்களை கண்டுபிடியுங்கள்..!!
உங்கள் உயரத்துக்கு, பாதகம் பற்றிய File கள் வைத்திருக்கிறோம்…
சந்தித்துப்பேச ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்…!!
—
புத்தளம் மரிக்கார்
