இலங்கையில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிவரும் பாகிஸ்தான் விமானங்களுக்கு தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் விமானப் போக்குவரத்துக்கு வான்வெளியைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனிதாபிமான காரணங்களைக் கருத்திற்கொண்டு பாகிஸ்தானுக்குத் தனது வான் எல்லையைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் இந்தக்கோரிக்கையை முன்வைத்த 4 மணி நேரத்திற்குள் இந்தியா இந்த அனுமதியை விரைவாக வழங்கியுள்ளது.
இந்த அனுமதி இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான பூசல்கள் இருந்தபோதிலும், அனர்த்தத்தின் போது இலங்கைக்கு உதவுவதற்கான மனிதாபிமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
