2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் நமது நாட்டில் 31,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 இற்கும் அதிகமானோர் காணாமல் போனார்கள். அத்துடன் பில்லியன் கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களும் அழிவடைந்தன.
2005 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தினம்” எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுனாமி பேரழிவினாலும், அதுமுதல் இன்றுவரை பல்வேறு அனர்த்தங்களினாலும் நாட்டில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூர்ந்து, மக்களின் பங்களிப்புடன் தேசிய பாதுகாப்பு தின நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இம்முறை “தேசிய பாதுகாப்பு தின” திட்டத்தின் கீழ், டிட்வா சூறாவளி காரணமாக நாட்டில் நிலவும் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, மாவட்ட மட்டத்தில் சர்வ மத வழிபாட்டுத் திட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், இம்முறை டிசம்பர் 26 ஆம் திகதி “தேசிய பாதுகாப்பு தின” பிரதான நினைவு நிகழ்வு, காலி “பெரலிய சுனாமி நினைவிடத்திற்கு” அருகில் 26.12.2025 அன்று முற்பகல் 8.30 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை நடைபெறவுள்ளது.
மேலும், “தேசிய பாதுகாப்பு தினத்தை” முன்னிட்டு சுனாமி பேரழிவிலும் ஏனைய அனர்த்தங்களினாலும் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் முற்பகல் 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட வேண்டும்.
எனவே, தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு 2025 டிசம்பர் 26 ஆம் திகதி முற்பகல் 9.25 மணி முதல் 9.27 மணி வரை சுனாமி பேரழிவிலும் ஏனைய அனர்த்தங்களினாலும் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலியை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
