கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாகவும், ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் சுப்ரீம் கோர்ட் பார்த்துக்கொண்டிருக்கிறது என்று சிவசேனா குற்றம் சாட்டியிருக்கிறது.
நாட்டில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது. ஆனால் மத்திய அரசு அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் நரேந்திரமோடி அரசு தோல்வி அடைந்துவிட்டதாக உலக மீடியாக்கள் குற்றம் சாட்டி வருகின்றன. ஃபேஸ்புக்கில் #ResignModi என்ற ஹேஷ்டாக் பதிவிடப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் நிர்ப்பந்தம் காரணமாக அதனை பேஸ்புக் நிர்வாகம் மறைத்துவிட்டது. பின்னர் தவறுதலாக அந்த ஹேஷ்டாக்கை பிளாக் செய்துவிட்டதாக ஃபேஸ்புக் நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் நரேந்திரமோடி அரசு கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக, மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில் அதன் ஆசிரியர் சஞ்சய் ராவுத் எழுதியுள்ள தலையங்கத்தில், “நாடு முழுவதும் கொரோனா நெருக்கடி இருந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. இதனை சுப்ரீம் கோர்ட் உறுதிபடுத்தியிருக்கிறது.
ஆனாலும் சுப்ரீம் கோர்ட் வெறுமனே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு அடியோடு செயலிழந்துவிட்டது. மருத்துவ ஆக்ஸிஜன், படுக்கைகள், தடுப்பூசி போன்றவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது கவலையளிப்பதாக இருக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைகளில் விபத்துக்கள் ஏற்பட்டு நோயாளிகள் இறந்து வருவதை காரணம் காட்டி மகராஷ்டிரா அமைச்சர்களை பா.ஜ.க தலைவர்கள் ராஜினாமா செய்யும்படி கேட்கின்றனர்.
ஆனால் மேற்கு வங்க தேர்தல் மற்றும் கும்பமேளா விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. நாடு தற்போது எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடிக்கு சுப்ரீம் கோர்ட் வெறுமனே பார்த்துக்கொண்டு இருப்பதுதான் காரணமாகும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்க தேர்தலில் முகக்கவசம் அணியாமல் பிரசாரம் செய்கிறார். ஹரித்வார் கும்பமேளாவில் கலந்து கொண்ட யாரும் முகக்கவசம் அணியவில்லை. தேர்தல் கமிஷன், போலீஸ், கோர்ட் போன்றவை வெறுமனே பார்வையாளராக இருக்கின்றன.
மோடி அரசு அரசியல் விரோதத்தைக் கைவிட்டுவிட்டு அனைத்துக் கட்சி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து கொரோனாவை ஒழிக்க சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும். ” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சஞ்சய் ராவுத் தனியாக அளித்த பேட்டியில் கொரோனாவை தேசிய பேரழிவாக அறிவிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே பிரதமர் நரேந்திர மோடியிடம் பல முறை கடிதம் மூலமாகவும், நேரடியாகவும் தெரிவித்துவிட்டார். தாக்கரே இதனை ஒரு மாதமாக சொல்லிக்கொண்டிருக்கிறார். இப்போது இதனை சுப்ரீம் கோர்ட்டும் கையில் எடுத்துள்ளது.
கொரோனா பிரச்னையில் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலையிட்டிருப்பது நாட்டுக்கு நல்லது. கொரோனா விவகாரத்தில் மஹாராஷ்டிராவுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அரசின் முயற்சிகளை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்