இஸ்ரேல்:பாலஸ்தீனத்திற்கு எதிராக இத்தாலி அனுப்பும் ஆயுதங்கள்!கப்பலில் ஏற்ற மறுத்த துறைமுக ஊழியர்கள்!

Date:

மனிதம் என்பது வெகு சாதாரண மனிதரிகளிடமிருந்து எதுகுறித்தும் யோசிக்காமல் தோன்றுவிடுகிறது என்பதற்கு மற்றொரு சான்றாய் இத்தாலியின் சுமைத் தூக்கும் தொழிலாளர்களின் செயல் அமைந்துள்ளது.

பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்னை சமீபத்திய நாட்களாக போர் மூளுமோ என்ற அளவிற்கு தீவிரமாகி வருகிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஆயுதக் குழுவான ஹமாஸ் இரண்டும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சர்வதேச தரப்பு சமாதான முயற்சிகளை மேற்கொண்டும் தாக்குதல்கள் நின்றபாடில்லை. பல அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இருதரப்பிலும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது என பொதுவாகக் கூறினாலும் பாலஸ்தீன தரப்பில்தான் இழப்புகள் அதிகம் அங்கு குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். பெண்கள்,குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் எட்டு பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இஸ்ரேல்- பாலஸ்தீன தாக்குதல்

இஸ்ரேல்- பாலஸ்தீன தாக்குதல்

காசாவிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படும் ஹமாஸ் குழுவை எப்படியாவது அழித்தே ஆக வேண்டும் எனத் தீவிர தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டு வருகிறது. கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் வார இறுதியில் காசாவில் உள்ள ஊடகத்தின் அலுவலக கட்டடம் ஒன்றையும் தகர்த்தது. அதில் ஹமாஸ் குழுவினர் செயல்பட்டு வருவதாகத் தாக்குதலுக்கு நியாயம் சொல்லியது.

இஸ்ரேல்- பாலஸ்தீன தாக்குதல்

இஸ்ரேல்- பாலஸ்தீன தாக்குதல்

ஆனால் அந்த கட்டடத்தில் ஏபி (AP) மற்றும் அல்ஜசீரா (Al Jazeera) போன்ற ஊடகங்கள் செயல்பட்டு வந்தன. அங்குள்ளவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றக்கூட போதுமான அவகாசத்தை இஸ்ரேல் கொடுக்கவில்லை. பலர் நூல் இழையில் அந்தக் கட்டடத்திலிருந்து வெளியேறித் தப்பித்தனர். பத்திரிகையாளர்கள், பொது மக்கள் என யாரையும் கருத்தில் கொள்ளாமல் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது கண்டனங்கள் குவிந்தன.

அமெரிக்காவும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால் அங்கு ஹமாஸ் குழுவினர் செயல்பட்டு வந்ததால்தான் நாங்கள் தாக்குதல் நடத்தினோம் அது நியாயமானதுதான் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு ( benjamin netanyahu) தெரிவித்திருந்தார்.அதுமட்டுமல்லாமல் ஹமாஸ் குழுவினரை அடியோடு சாய்க்கும் வரை தாக்குதல் இதே வேகத்தில் தொடரும் என்றும் தெரிவித்திருந்தார்.அதற்கு பிறகான இரண்டு நாட்களும் தாக்குதல்கள் விடாமல் நடைபெற்று வருகின்றன.

இஸ்ரேல்- பாலஸ்தீன தாக்குதல்

இஸ்ரேல்- பாலஸ்தீன தாக்குதல்

இஸ்ரேலின் நடவடிக்கையை எதிர்த்தும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் என பல்வேறு நாடுகளில் போராட்டங்களும் நடந்தன.

இத்தாலிய சுமை தூக்கும் தொழிலாளர்களின் மனிதநேயம்:

உலக நாடுகள் தங்களின் கொள்கையை பொறுத்து இஸ்ரேலின் பக்கமா அல்லது பாலஸ்தீனத்தின் பக்கமா என்று பேசிக்கொண்டிருகையில், ‘மனிதம்’ என்பது சாதாரண மனிதர்களிடமிருந்து, எதைப்பற்றியும் யோசிக்காமல் தோன்றி விடுகிறது என்பதற்கு மற்றொரு சான்றாக இத்தாலியின் சுமை தூக்கும் தொழிலாளர்களின் செயல் அமைந்துள்ளது. இஸ்ரேலின் அஷ்தோத் நகரத்தில் உள்ள துறைமுகத்துக்கு இத்தாலியின் லிவார்னோ நகரில் இருந்து வெடிப்பொருட்களையும், ஆயுதங்களையும் சுமந்து செல்ல காத்திருந்தது ஒரு கப்பல். ஆனால் இத்தாலியின் லிவார்னோ துறைமுகத்தில் பணிபுரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தயங்கி நின்றனர். தாங்கள் அந்த கப்பலில் ஏற்றி நிரப்பவேண்டியது பாலத்தீன மக்களின் உயிரை காவு வாங்கக்கூடிய இஸ்ரேல் ராணுவத்திற்கான வெடிபொருட்களும், ஆயுதங்களும்தான் என்பதை தெரிந்தவுடன், தாங்கள் அந்த `பாவச் செயலில்` ஈடுபட மாட்டோம் எனத் தெரிவித்துள்ளனர். சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கான சங்கம், லிவார்னோ துறைமுகம் ஒருபோதும் பாலஸ்த்தீன மக்களின் படுகொலையில் பங்கெடுக்காது என்றும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்:பாலஸ்தீனத்திற்கு எதிராக இத்தாலி அனுப்பும் ஆயுதங்கள்!கப்பலில் ஏற்ற மறுத்த துறைமுக ஊழியர்கள்!

அதுமட்டுமல்லாமல் காசா மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் என வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் சுமை தூக்கும் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.இத்தாலி நாட்டின் பிற பகுதிகளிலும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வீதிகளில் கூடிய மக்கள் “எங்கள் நிலத்தில் என்ன நடக்கிறது என்பதை உலக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தனர். இத்தாலி நாட்டிலிருந்து செல்லும் ஆயுதங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இத்தாலிய அரசுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கோரிக்கையும் வைத்துள்ளன.சூழல் எவ்வாறாக இருந்தாலும் இரு வாரங்களாக கடுமையாக நடைபெற்று வரும் மோதலில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது ஏதும் அறியா பொதுமக்களே.

நன்றி விகடன்

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...