காலம்சென்ற புத்தளம் நகரபிதா கே.எ. பாய்ஸ் அவர்களின் மறைவையொட்டி, அன்னாரின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரும் ஊடகவியலாளரும், சமூக   செயற்பாட்டாளருமான எஸ்.ஏ. அஸ்கர் கான் எழுதியுள்ள இரங்கல் செய்தி

Date:

அன்பின் நண்பா !
படையப்பா ! தல ! KAB !
நீ அவசரக்காரன். ஆம்
நீ எதிலும் அவசரக்காரன் தான் !!
உன் மரணத்திலும் அதனை உறுதிப்படுத்திவிட்டாய் !!!

புத்தளத்தின் அரசியல் ஆளுமை,
தனி மனித இயக்கம்,
விழுதுகள் அற்ற வேர் முதிர் ஆலமரம்,
புத்தளத்தின புதுமைப் பித்தன் !!!

கடற்கரை கழிவறையை கலங்கரை விளக்கமாக்கியவன்,
விஞ்ஞானக் கல்லூரியின் ஸ்தாபக விற்பன்னன்,
திறந்த பல்கலைகழக புத்தள கிளையின் திறவுகோல்,
விளையாட்டரங்கை விஸ்தரித்த வீரன்,
அல்பா சந்தையின் அத்திவாரம்,
நூலகசாலையின் நூதனப் பிரியன்,
கொழும்பு முகத்திடலின் முகவரி,

பூத்துக் குழுங்கும் புத்தளத்தை
பார்க்க முயலும் பயணமிது !
இளைஞர்களின் கனவுகள்
ஒருபோதும் தோற்றதில்லை !
கல்லெல்லாம் மலையாக
கழகம் அமைத்து தடுத்தாலும்,
காற்றெல்லாம் புயலாக
சீறித்தான் பாய்ந்தாலும்,
நோக்கம் எமது வெற்றிதான் !!
நொடிப்பொழுதும் விலக மாட்டோம் !!!
என
வீர வசனங்களுடனான
உன் அரசியல் பயணத்தின்
ஆரம்ப நாட்களில் அத்திவார கற்களாய்
புதையுண்டு போன பொழுதுகள்
இன்று நினைவூட்டப்படுகின்றன !

‘யார் இவர் ?’
என்ற கேள்விக் குறியோடு ஆரம்பித்து
‘இவர்தான் அவர் !!!’
என அடையாளப்படுத்திய போஸ்டர்களோடு
உன்னை ஆட்சி மேடை ஏற்றி
அழகுபார்த்த அந்த ஆரம்ப நாட்கள்
கண் முன்னே நிழலாடுகின்றன !

1997 மார்ச் மாதம்
22ம் நாள்
உன் கன்னி வெற்றி
புத்தளம் நகர பிதாவாக
நகர்வலம் வந்த போது – நான்
நாடோடி போல ஓடி ஓடி
ஊரைக் கூட்டிய உணர்வுகள்
இன்னும் உரமாய் உள்ளன !

அறிவும், ஆற்றலும்,
துணிவும், தூரநோக்கு சிந்தையும்,
தீர்க்கமான முடிவெடுக்கும் சக்தியும்,
தீட்சண்ய பார்வையும்,
உனக்கே உரித்தான தனித்துவப் பண்புகள் !!

‘ பாயிஸ், நீ  அதிஷ்டவசமாகவோ, துரதிஷ்டவசமாகவோ
அரசியல் அரியணையில் அவசரமாய் ஏறிவிட்டாய்.
உன் 40 வயது வரை நிதானமாய் பொறுத்து,
அரசியல் செய்
அதன் பின் உன் முதிர்ச்சி
உன் அரசியலை அழகுபடுத்தும்’ என
மறைந்த மாமனிதர் பெருந்தலைவர்
மர்ஹும் அஷ்ரப் அவர்கள்
அன்று உனதும், எனதும் இருபதுகளில்
அறிவுரை வழங்கிய தருணத்தில்,
‘இன்ஷா அல்லாஹ்
அதுவெல்லாம் சரிவரும் Leader’ என
நீ உரைத்த அந்த உச்ச ஸ்தாயிலான
உருக்கமான வரிகள் என்னுள்
இன்னும் உணர்வுபூர்வமாய் உள்ளன !

அன்று சொன்ன 40 களின் பிற்பகுதி,
50 இன் முற்பகுதி,
உன் முதிர்ந்த அரசியல் சாணக்கியத்தின்
பிரவாகத்தினை அண்மைக்காலமாக அவதானித்து
உன்னை ஆரத்தழுவி ஆதரிக்க நினைத்ததுண்டு
அதற்குள் நீ புறப்பட்டு விட்டாய் !

நம் இருவரின் சிந்தனையும்,
அரசியல் பார்வையும், பயணமும்
ஒரே நேர் கோட்டில் ஆரம்பித்து,
பின் இரு சமாந்தரங்களாக பிரிந்து,
இரு துருவங்களாக நகர்நிலை கண்டாலும் ;

உணர்வுகளுக்கு ஊட்டமாய்,
உண்மையின் வெளிப்பாடாய்,
வேற்றுமையில் ஒற்றுமை கண்டோம் !
தனித் தனியே பிரிந்து நின்று
ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்தோம் !
விசனம் தெரிவித்தோம் அவ்வப்போது
விமர்சனமும் செய்து கொண்டோம் !
ஆனால்,

அவை அனைத்தும்
உருக்கமான உறவின் அடியிலான
ஆக்க பூர்வமான அரசியல், சமூக மாற்றத்தின்
அடிப்படையை கொண்டதே அன்றி
ஒரு போதும் உனதும், எனதும் சுயநலமோ
கபட நாடகமோ அல்ல நண்பா !!!

கடைசியாக  நான் உன்னை  சந்தித்த நாள்
Pandemic க்கு முந்திய பெருநாள் தின சந்திப்பு
நீ, என்னை கட்டியணைத்து காதுக்குள் சொன்னாய்,
தூர நின்று கருத்து சொல்லாமல்,
கூட வந்து குரல் கொடு,
நாம் மீண்டும் இணைவோம்
இன்னும் பல அடைவுகளை
அடையாளப்படுத்தலாம் நம் புத்தளம் மண்ணுக்கு,
என அறிவுரை கலந்த அழைப்பை விடுத்தாய் !!

அன்பின் நண்பா,
அரசியலில் உன்னோடு சேர்ந்து உரமூட்டுவதா?
அல்லது
அந்நியமாய் நின்று அவதானிப்பதா?
அல்லது
அமுக்க குழுவாக கண்ணியமாக உன்னை வளம் ஊட்டுவதா?
என நான் முடிவெடுக்க முன்பே,
நீ புறப்பட்டு விட்டாய் !!!

அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கத்தினர்
அவசரமாய் தன்னிடத்தை விட்டுக் கொடுப்பதுமில்லை,
அவசரமாய் மற்றவரை அங்கீகரிப்பதுமில்லை,
ஆனால் நீ அதிலும் மாறுபட்டவன் !
அந்தக் கூற்றையும் பொய்ப்பித்து
உன் அவசரப்பாணியில்
இன்று நீ புறப்பட்டு விட்டாய் !!!
புதிய முகவரிகளின் வரவுகளுக்கு இடம்விட்டு…

இறை நாட்டம்,
இதுவொரு இறை நியதி,
இன்று நீ, நாளை நாங்கள்,
யாரும் மறுக்க முடியாத மந்திரத் தேதி

இன்ஷா அல்லாஹ்,
மீண்டும் சந்திப்போம்
மஹ்ஷர் மைதானத்தில்
கனத்த மீஸானுள் ஹஸனாத்துடன்
சுவர்க்கத்தின் வாயிலறை நோக்கிய பயணத்தில்

யா அல்லாஹ் !
என் நண்பன்
ஊரை உரமூட்ட,
ஊரை பாதுகாக்க,
ஊரை வளமூட்ட,
ஊரை வழிநடாத்த
எடுத்த அனைத்து முயற்சிகளையும்
பொருந்திக் கொள்வாயாக !
மனித பலவீனத்தால் ஏற்பட்ட பாவங்களை
மன்னித்தருள்வாயாக !
பூத்துக் குலுங்கும் புத்தளத்தை காண முயற்சித்தவனின்
மண்ணறை வாழ்க்கையை
சுவனத்தின பூங்காவாக மாற்றுவாயாக !
அவரது மறுமை வாழ்க்கையை வெற்றியின்
அடையாளமாக்குவாயாக !

தந்தையை பிரிந்த பிள்ளைகள்,
கணவனை இழந்த மனைவி,
மகனை பறிகொடுத்த தாய்,
சகோதரனை தொலைத்த உடன் பிறப்புக்கள்,
அனைவரினதும் உள்ளங்களில் அமைதியை ஏற்படுத்தி
இந்த இழப்பை தாங்கிக் கொள்ளக்கூடிய
உடல், உள வலிமையை வழங்குவாயாக !
ஆமின்.

எஸ்.ஏ. அஸ்கர் கான்

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...