சீனாவின் உய்குர் முஸ்லிம்களை உங்கள் சிந்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள் | ஸ்கொட்லாந்து ஊடகவியாளர் தஸ்னிம் நஸீர் உலக முஸ்லிம்களிடம் கோரிக்கை

Date:

ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த விருது வென்ற சுதந்திர ஊடகவியலாளரும், எழுத்தாளரும் நூலாசிரியருமான தஸ்னிம் நஸீர் முஸ்லிம்களின் இந்தப் புனித றமழான் மாத காலத்தில் உலக முஸ்லிம்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளார். சீனாவில் மிக மோசமான கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கும் உயகுர் இன முஸ்லிம்கள் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் தனது சிந்தனையில் கொள்ள வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள்.
இலங்கைப் பெற்றோர்களுக்குப் பிறந்து லண்டனில் குடியேறி வசித்து வரும் தஸ்னிம் விடுத்துள்ள இந்தக் கோரிக்கை உலக முஸ்லிம் தலைவர்களை வெற்கித் தலைகுனிய வைத்துள்ளது. உலக முஸ்லிம் தலைவர்கள் சீனாவின் உய்குர் இன முஸ்லிம்களைக் கைவிட்டுள்ள நிலையில் அந்த மக்கள் மீது சீனா நடத்தி வரும் காட்டுத் தர்பாரையும் கண்டு கொள்ளாமல் விட்டுள்ளனர்.

தஸ்னிம் நஸீர்
கொடுமை இழைக்கப்பட்டு வரும் உய்குர் முஸ்லிம்களை உலகம் கைவிட்டுள்ளது. 1949ல் சீனாவின் செம்படை இராணுவம் இந்தப் பிராந்தியத்தை ஆக்கிரமிப்புச் செய்தது முதல் இந்த மக்கள் தமது அரசியல், பொருளாதார, சமய, கலாசார உரிமைகளுக்காகவும் அன்றாட வாழ்வுரிமைக்காகவும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சீனாவின் மொத்த சனத்தொகையில் இவர்கள் வெறுமனே 1.6 வீதமாக மட்டுமே இருந்த போதிலும் இவர்கள் வசித்து வரும் சின்ஜியான் மாநிலம் சீனாவைப் பொருத்தமட்டில் அபிரிமிதமான மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டதாகும். இந்தப் பிhந்தியத்தில் தான் சீனா அதிகளவான அணு சோதனைகளை நடத்தி வருகின்றது. சீனாவும் ரஷ்யாவும் அணு சோதனைக்கான இடத்தைத் nரிவு செய்கின்ற போது பொதுவான ஒரு போக்கினைக் கடைப்பிடிப்பதை அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் அணு சோதனைகளை நடத்துவதுதான் அந்தப் பொதுவான போக்கு. அணு சோதனைகள் நடத்தப்படுவதன் மூலம் அந்தப் பிராந்தியத்தின் நீர் நிலைகள் மற்றும் காணிகள் பாரிய அளவில் மாசடைகின்றன. புற்றுநோயை உருவாக்கும் பல புறக் காரணிகள் இதன் மூலம் இந்தப் பகுதிகளில் தோற்றம் பெறுகின்றன. புதிதாகப் பிறக்கும் சிசுக்கள் பல்வேறு தாக்கங்களை எதிர் கொள்கின்றன. இவை தவிர இன்னும் எத்தனையோ விதமான பிரச்சினைகளுக்கு அந்த மக்கள் முகம் கொடுக்கின்றனர். இவற்றை எல்லாம் பொருட்படுத்தாது தான் சீனாவும் ரஸ்யாவும் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களைத் தெரிவு செய்து அணு சோதனைகளை நடத்தி வருகின்றன.

இந்த நிலையிலேயே உய்குர் முஸ்லிம்கள் பற்றி சிந்திக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் தஸ்னிம் நஸீர். வட மேற்கு சீனாவின் சின்ஜியாங் மாநிலத்தில் சுமார் 15 லட்சம் முஸ்லிம்கள் பலவந்த தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் உலகத் தலைவர்கள் அமைதியாகவே உள்ளனர். தமது சமயத்தைப் பின்பற்றுவதற்கான எல்லா உரிமைகளையும் சீன அரசு அவர்களிடம் இருந்து பறித்துள்ளது. தமது சமய விசுவாசத்தைக் கைவிட்டு விட்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான விசுவாசத்தைத் தழுவிக் கொள்ளுமாறு அவர்கள் வற்புறுத்தப்படுகின்றனர்.
பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன அவற்றை சுற்றி கடும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்கானிப்பின் கீழ் பள்ளிவாசல்கள் அமைந்துள்ள பகுதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த றமழான் மாதத்தில் கூட பள்ளிவாசல்களுக்குள் நுழைய அனுமதி கிடையாது. தனிப்பட்ட முறையில் நோன்பு நோற்கக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைமீறி நோன்பு நோற்பது தெரியவந்தால் அவர்கள் கடும் சித்திரவதைக்கு முகம் கொடுக்க வேண்டி உள்ளது. உய்குர் மக்கள் தாங்கள் முஸ்லிம்கள் என்பதை வெளிப்படுத்தும் ஏதாவது ஒரு அடையாளத்தைக் கொண்டிருந்தால் (அதாவது தலையை மூடுதல், தாடி வைத்திருத்தல் அல்லது குர்ஆன் ஓதல் போன்றவை) உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.
2017 முதல்உய்குர் இன முஸ்லிம்கள் மீதான அரச அடக்குமுறை தீவிரம் அடைந்துள்ளது, இதனால் பல குடும்பங்களில் இருந்து சிறுவர்கள் பிரிக்கப்பட்டு பலவந்தமாக இடம் பெயர்க்கப்பட்டுள்ளனர். அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எந்த வகையிலும் இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். அவர்களால் தொழுகையில் ஈடுபட முடியாது, நோன்பு நோற்க முடியாது, புனிதக் குர்ஆனை ஓதவும் முடியாது. ஆயிரக்கணக்கான மக்கள் தமது அன்புக்கு உரியவர்கள் எங்கே உள்ளனர் என்பது கூடத் தெரியாமல் தவிக்கின்றனர்.

உய்குர் முஸ்லிம்களுக்கு சமயச் சுதந்திரம் என்பது கொஞ்சம் கூட கிடையாது. முஸ்லிம் என்ற தனித்துவத்தை வெளிப்படுத்தும் உரிமையும் அவர்களுக்கு இல்லை. முஸ்லிமாக வாழும் உரிமையும் அவர்களுக்கு இல்லை.

கடந்த பல ஆண்டுகளாக அந்த மக்கள் தமக்காக உலக முஸ்லிம் நாடுகள் குரல் கொடுக்காதா? என ஏங்கிய வண்ணம் உள்ளனர். சமயரீதியான கொடுங்கோண்மைக்கு ஆளாக்கப்பட்டுள்ள தம்மீது உலகம் கவனம் செலுத்தாதா? என்று காத்திருக்கின்றனர். ஆனால் தமது சகோதர முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பதற்கு பதிலாக மத்திய கிழக்கில் உள்ள முஸ்லிம் நாடுகள் சீனாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி அதன் போக்கை மறைமுகமாக நியாயப்படுத்திக் கொண்டு இருக்கின்றனர். சீனாவோ இந்த நிலையை தனக்கு சாதகமாக்கி ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீற்ல்களையும் கச்சிதமாக அரங்கேற்றி வருகின்றது.

சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உற்பட சில நாடுகள் மிகவும் வெற்கக் கேடான விதத்தில் சீனாவின் நிலைப்பாட்டை ஆதரித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கடிதத்துக்கு ஆதரவளித்துள்ளன. மேலும் ஒரு அரிய நிகழ்வாக இந்தப் பிராந்தியத்தின் நாடுகள் தமக்கிடையிலான பேதங்களை எல்லாம் துறந்து சீனாவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் ஒன்று பட்டுள்ளன. இது மிகவும் ஆச்சரியமானதாகும்.
உய்குர் முஸ்லிம்களின் நிலைமையை உலகம் உணரும் வகையில் அது தற்போது விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு வழிகளில் கசிந்த மிக ஆழமான சாட்சியங்கள் மற்றும் சான்றுகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. சீனா வேண்டுமென்றே முஸ்லிம்கள் மீது நடத்தி வரும் அடக்குமுறை இதில் தெட்டத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சீனாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இஸ்லாம் மீதான அச்சத்தைப் போக்க எந்த அனுபவமும் அற்ற விதத்தில் தான் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளின் அரசுகளும் தலைமைகளும் காணப்படுகின்றன.

மத்திய கிழக்கு நாடுகள் சீனாவை ஆதரிக்க பிரதான காரணங்களில் ஒன்று பொருளாதார ரீதியான நன்மையாகும். சீனா மேற்கொண்டு வரும் கவர்ச்சிகரமான பண்டைய பட்டுப்பாதை பிரசாரம் இதில் பிரதான இடம் பிடிக்கின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் அரபு நாடுகளுடன் சீனா 35.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இதில் 1.2 பில்லியன் டொலர் உள்நாட்டின் சக்திவளத் தேவை உற்பத்திகளுக்காக திசை திருப்பப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக அரபு நாடுகளுக்கு சீனாவுடன் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியான உறவுகளும் உள்ளன. சீனாவுடன் இத்தகைய உறவுகளைப் பேணுவதை விட உய்குர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுப்பது ஒன்றும் முக்கியமான விடயம் அல்ல என்று அந்த நாடுகள் முடிவு செய்துள்ளன.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகள் விரும்பினால் உய்குர் மக்களுக்காக குரல் கொடுக்கலாம். சீனாவுடனான உறவுகளைத் துண்டித்து இஸ்லாம் போதிக்ககும் தார்மீக ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள அந்த மக்களைப் பாதுகாக்க குரல் எழுப்பலாம். ஆனால் துரதிஷ்டவசமாக பொருளாதார மற்றும் அரசியல் கரிசணைகள் அரபு உலகத் தலைவர்களுக்கு மிகவும் முக்கியமானவையாக மாறி உள்ளன. மிகக் கொடூரமான தடுப்பு முகாம்களில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு வேதனைகளை அனுபவித்து வரும் 15 லட்சம் முஸ்லிம்களின் நலன்களைவிட, அவர்களின் உயிர்களை விட, அந்த மக்களின் வாழ்வுரிமை மற்றும் வாழ்வாதாரம் என்பனவற்றை விட அரபு உலகத் தலைவர்களுக்கு ஏனைய விடயங்கள் பிரதானமாகி உள்ளமை துரதிஷ்டவசமாகும்.

இந்தப் பனித றமழான் நோன்பு மாத காலத்தில் அடக்குமுறைக்கு ஆளாகி உள்ள உய்குர் முஸ்லிம்கள் பற்றி தமது சிந்தனையைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது உலக முஸ்லிம்களின் கடமையாகும். ஒரு தனி மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு ஏனைய எல்லா மனிதனையும் பாதிக்கக் கூடியது என்பதை கொரோணா வைரஸ் பரவல் எமக்கு நன்றாக உணர்த்தி உள்ளது. எமது சிந்தனைகளை மீட்டிப் பார்க்கவும் மற்றவர்களுக்கு உதவவும் றமழான் மிகச் சிறந்ததோர் காலப்பகுதியாகும்.
நான் உற்பட பல முஸ்லிம்கள் உய்குர் மக்களுக்கு எம்மால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றதே என்று வேதனைப்பட வேண்டும். மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவர்கள் அதுபற்றி யோசிக்காமல் இருப்பது இந்த வேதனையை மேலும் அதிகரிக்கின்றது. அமைதியாக இருக்கும் தலைவர்கள் அநீதிக்கு வழிவிட்டவர்களாகக் காணப்படுகின்றனர். சமயச் சுதந்திரத்தை அவர்களே குறைவாக மதிப்பிட்டுள்ளனர். இஸ்லாம் மீதான அச்சம் உலகம் முழுவதும் பரவவும் இவர்களே பங்களிப்புச் செய்கின்றனர்.

இந்த புனித றமழான் மாதத்தைப் பயன்படுத்தி முஸ்லிம் உலகத் தலைவர்கள் தமது சமய விழுமியங்களோடு தம்மை மீள தொடர்பு படுத்திக் கொள்ள வேண்டும். உய்குர் முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்த வேண்டாம் என சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் சீனாவில் முஸ்லிம்களின் வரலாறும் அடையாளமும் முழுமையாகத் துடைத்து எறியப்படும் வரை சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் அழுத்தங்களைத் தீவிரமாக்குவது தடுக்க முடியாத ஒன்றாகிவிடும்.

லத்தீப் பாரூக்

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...