மறைந்தும் மக்கள் மனதில் வாழும் அரசியலின் உதாரண புருஷர் ரணசிங்க பிரேமதாசா!

Date:

 

இலங்கையின் மூன்றாவது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாசவின் 28வது சிரார்த்த தினம் மே 1 ஆம் திகதி இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு NewsNow தமிழ் வழங்கும் விசேட கட்டுரை.

இலங்கையின் 3 வது நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாச 1923 ஆம் ஜூன் மாதம் 23ஆம் திகதி பிறந்தார். ஜே.ஆர். ஜெயவர்தன இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பிரேமதாச பிரதமராக பதவி வகித்தார். (1950 -_ 1989 ) 39 வருடங்கள் தமது அரசியல் வாழ்க்கையில் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் தன்னையே அர்ப்பணித்த தலைவராவார். 4 வருடங்கள் 4 ,மாதங்கள் இலங்கை நாட்டின் ஜனாநாயக சோஷலிச குடியரசின் நிறைவேற்று ஜனாதிபதியாகவும் அவர் பதவி வகித்தார். இவர் தமது 69வது வயதில் 1993ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதி கொழும்பு ஆமர் வீதியில் இடம்பெற்ற மே தின ஊர்வலத்தின்போது விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டுதாரியினால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். அவர் மரணமடைந்து இன்றுடன் மே 1 ஆம் திகதியுடன் 28 வருடங்கள் பூர்த்தியாகின்றது.

கொழும்பு புனித ஜோசப் கல்லூரியில் கல்வி கற்ற பிரேமதாச முன்னாள் தொழிற்சங்கவாதியான காலம் சென்ற ஏ. ஈ குணசிங்கவின் மூலம் தமது அரசியல் வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தார். அதன் பின்னர் 1950 ஆம் ஆண்டு ஜ.தே..கட்சியில் இணைந்து கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் பிரதி மேயராகவும் கொழும்பு மத்திய தொகுதியின் அரசியலில் பிரவேசித்தார்.

டட்லி சேனாநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் 1967ல் இலங்கை ஒலிபரப்பு அமைச்சராகவும், பதவி வகித்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினை ஆரம்பித்தார். இவர் பிரதமராகவும் வீடமைப்பு உள்ளூராட்சி நகர அபிவிருத்தி நீர்விநியோக வடிகாலமைப்பு பொறுப்பான அமைச்சராகவும் பதவி வகித்தார். இக் கால கட்டத்தில் நாடு முழுவதிலும் 1 இலட்சம் மற்றும் 10 இலட்சம் வீடமைப்புத் திட்டங்களை அமுல்படுத்தி வீடடற்றவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தார். கம்உதாவ, கிராம எழுச்சித் திட்டம், கெத்தராம, சுகதாச மைதானங்கள், 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டம், நாடு முழுவதில் உள்ள நகரங்களில் மணிக்கூட்டுத் கோபுரங்களையும் நிறுவுதல், மகாவலி அபிவிருத்தித் திட்டங்களில் சுதந்திர வர்த்தக வலையங்களை நிர்மாணித்தல் போன்றவற்றை ஆரம்பித்தார். பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தினையும் உருவாக்கினார். நாடு முழுவதிலும் சகல அமைச்சுக்களையும் திணைக்களத்தினையும் கிராமங்களுக்கு அழைத்து நடமாடும் சேவையை ஏற்படுத்தி மக்களது பிரச்சினைகளைக்கு உடனுக்குடன் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தார். கல்விக் கல்லூரிகள் நிறுவும் திட்டம் இவரது காலத்திலேயே ஆரம்பமானது. அத்துடன் நாடு முழுவதிலும் 25 ஆயிரம் ஜனசவிய ஆசிரியர்கள் நியமனங்களை ஒரே நாளில் வழங்கினார்.

கொழும்பு, கண்டி, கம்பஹா மாவட்டங்களில் தொடர்மாடி வீடுகளை ஏற்படுத்தி, கொழும்பு வாழ் சேரிப்புற மக்களது வீடில்லாப் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டார். அம் மக்கள் இன்றும் இவர் நிர்மாணித்த தொடர்மாடி வீடுகளில் வாழ்ந்து தங்கள் வீடுகளில் காலஞ்சென்ற ஆர்.பிரேமதாசவின் உருவப்படத்தினை வைத்து பூஜிக்கின்றனர்.

தமக்கென்று ஒரு குடி மனையை வழங்கிய உத்தம புருசர் எனக் கூறுகின்றனர். இவரது மறைவுக்குப் பிறகு இந்த நாட்டில் இதுவரை வந்த எந்த அரச தலைவர்களோ வீடமைப்பு அமைச்சர்களோ நகர் வாழ் மக்களது வீடில்லாப் பிரச்சினைக்களை தீர்க்க வில்லை. இன்றும் இலட்சக் கணக்கான மக்கள் தமக்கென்று ஒரு வீடொன்றினை மாதாந்த கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ள கடந்த 24 வருடங்களாக வீடமைப்பு அமைச்சுக் காரியாலயங்களில் அலைந்து திரிகின்றனர்.

கொழும்பு வாழைத்தோட்டத்தில் உள்ள அவரது வீடான ”சுச்சரித்த ” வில் அதிகாலை 04.00 மணியளவில் மக்கள் சந்திப்பினை ஏற்படுத்தி அம் மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்து உடன் அதிகாரிகளை பணித்து அவற்றைத் தீர்ப்பார். அவர் நினைக்கும் அல்லது கூறும் ஆலோசனைகளை உடனே குறித்த அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். முடியாது என்ற வார்த்தை அவரது அகராதியில் இல்லை. அதனை அவர் அதிகாரிகளிடமிருந்து எதிர்பாராது எவ்வாறேனும் செயற்படுத்திவிடுவார்.

கொழும்பு மாவட்டத்தில் வீடற்ற மக்களுக்கு 225 க்கும் மேற்பட்ட தொடர்மாடி வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணித்து நடுத்தர மக்களது வீடில்லாப் பிரச்சினைக்குத் தீர்வினை பெற்றுக் கொடுத்தார். ஜக்கிய நாடுகள் மனித குடியிருப்பு அமையத்தினை ஏற்படுத்தி சர்வதேச குடியிருப்பு தினமொன்றினை ஒவ்வொரு அக்டோபர் மாத முதலாம் திங்கட் கிழமைகளில் கொண்டாடுவடுவதற்கு முன் மொழிந்து வெற்றியும் கண்டார். அத்துடன் 2000 ஆம் ஆண்டை வீடற்ற ஆண்டாகவும் பிரகடனப்படுத்தினார் ரணசிங்க பிரேமதாச
நாடு பூராகவும் கிராம எழுச்சித் திட்டங்கள், மற்றும் 4000க்கும் மேற்பட்ட வீடமைப்பு கிராமங்களை உருவாக்கினார். இதன் மூலம் அப்பிரதேசத்தில் மின்சாரம், நீர், பாதை, பாடசாலை தோட்டம், மரநடுகை, விளையாட்டு மைதானம், சந்தை , சனசமூக நிலையம், மத வழிபாட்டுத் தளங்கள் அமைப்பதற்கு இத் திட்டத்தினை பயன்படுத்தினார்.

இந்த நாட்டில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த மக்களுக்காக ஜனசவிய எனும் உதவித் திட்டத்தினையும் உருவாக்கினார். ஏழை மக்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதற்கும் பாடுபட்டார். கட்டுநாயக்க மற்றும் தென்பகுதிகளிலும் தொழில்பேட்டைகளையும் ஆரம்பித்து வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்போடு கிராமத்து இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெறுவதற்கும் காரணகர்த்தாவாக இருந்தார்.அத்தோடு சிறுபான்மை கட்சிகளின் பாராளுமன்ற பிரவேசத்திற்கு இவருடைய பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது எனலாம்.

அத்துடன், தாபரிப்பு பெற்றோர் மற்றும் கல்வி, மேம்பாட்டுக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க ஒரு தலைவராக விளங்கிய ஆர். பிரேமதாசா மறைந்து 28 வருடங்களான போதும் அவரது சேவையினால் நன்மையடைந்த மக்கள் மனதில் இன்றும் அவர் நிலைகொண்டுள்ளார்.

இவர் இந்த நாட்டின் ஜனாதிபதியான போது நாட்டில் பாரிய யுத்தமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக் காலத்தில் இலங்கை – இந்திய ஒப்பந்ததின் பிரகாரம் நாட்டில் இந்தியப் படையினர் நிலை கொண்டிருந்தனர். உடன் செயற்பட்டு இந்திய அமைதிகாக்கும் படையினரை இலங்கையை விட்டு வெளியேற்றினார்.

ரணசிங்க பிரேமதாச தமது ஜ.தே.கட்சியின் தலைவர் பதவியில் இருக்கும்போது அக் கட்சி சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி கண்டார். ஏழைக் குடும்பத்தில் பிறந்து அவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு இவருக்கு பின்னால் பாரிய மக்கள் சக்தி திரண்டு இருந்தது. தற்பொழுது ஆர். பிரேமதாசாவின் அடிச்சுவட்டினை பின்பற்றியே அவருடைய அரசியல் வாழ்க்கையில் பயணிக்கின்றார்.இலங்கையின் ஆட்சியாளர்களில் அனைத்து மக்களாலும் போற்றப்படுகின்ற தலைவராக ஆர்.பிரேமதாஸா விளங்குகின்றார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...