நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 170,022 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது..
கேகாலை மாவட்டத்தில் மாவனெல்லை தெவனகல கந்த மற்றும் வரக்காபொல அல்கம கந்த என்ற இடங்களில் இன்று (05) இடம்பெற்ற மண் சரிவு காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் மேலும் 03 பேர் காணாமல் போயிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.மீட்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் ஒரு மாணவி உயிரிழந்துள்ளார்.
மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். புத்தளம் மாதம்பை பிரதேசத்திலும் ஹொரண பிரதேசத்திலும் குளிக்கச் சென்ற 2 பேர் நேற்று (04) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
புத்தளம் மகாவெவ குளத்திற்கு நீராடச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ளார்.இதற்கமைய இதுவரை 7 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கம்பகா நகரம் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் பல வீடுகள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால் மக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர். சில இடங்கள் 5 அடி உயரத்தில் நீரில் மூழ்கி உள்ளன.
நீர் வழிந்தோடும் பகுதி அடைப்பட்டுள்ளமையே இதற்கான பிரதான காரணமாகும். அத்தனகல்ல ஓயாவும் ஊறுகல் ஓயாவினாலும் வெள்ள அனர்த்தநிலை ஏற்பட்டுள்ளது.
இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தில் கட்டடம் ஒன்று ஒன்றின் மீது மண் திட்டு இடிந்து விழுந்து இருப்பதால் பல வகுப்பறைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது புத்தளம் மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளும் வழிந்து ஓடுவதால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(அரசாங்க தகவல் திணைக்களம்)