தடுப்பூசி விலை குறித்த கேள்விக்கு சீன அரசாங்கமே பதிலளிக்க வேண்டுமென அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இலங்கை சினோபார்ம் தடுப்பூசி ஒன்றின் விலை 15 டொலர் என தெரிவித்துள்ள போதிலும் , பங்களாதேஷ் அதனை 10 டொலருக்கு கொள்வனவு செய்துள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றையதினம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விடயம் குறித்து, அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் உதய கம்மன்பில,
இந்தப் பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கத்தால் பதிலளிக்க முடியாது. இதற்கு சீன அரசாங்கமே பதில் தர வேண்டும்.
15 டொலர்களுக்கு இலங்கைக்கு வழங்கப்பட்டதா? இல்லாவிடின், இதில் மோசடிகள் ஏதும் இடம்பெற்றுள்ளதா? பங்களாதேஷுக்கு உண்மையில் 10 டொலர்களுக்குத்தான் வழங்கப்பட்டதா? போன்ற கேள்விகளுக்கு சீன அரசாங்கமே பதில்தர வேண்டும்.
ஆனாலும் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு குறைந்த விலைக்கு தடுப்பூசி கிடைத்துள்ளது எனப் பதிலளித்தார்.