ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன. பேஸ்புக் ஊடாக பகிர்ந்த செய்தி தொடர்பில், கருத்து பதிவிட்டு மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் விடுத்துள்ள மறைமுக அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆறு ஊடக அமைப்புக்கள் கூட்டாக இது தொடர்பில் விசாரணை கோரியும், ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கோரியுள்ளன.
இது குறித்த கடிதம் ஊடக அமைப்புக்களின் கூட்டு எனும் கடிதத் தலையின் கீழ் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஊடக சேவையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனம், சுதந்திர ஊடக அமைப்பு, இலங்கை தொழிற்சார் ஊடகவியலாளர்களின் சங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தமிழ் ஊடகவியலாளர்களின் ஒன்றியம், இலங்கை இளம் ஊடகவியலாளர்களின் சங்கம் ஆகியவை இணைந்தே இக்கடிதத்தை அனுப்பியுள்ளன. கடிதத்தின் பிரதியொன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன பொய்யான செய்தியை வெளியிட்டதாகவும் அதற்கு இயற்கை தண்டனையளிக்கும் எனவும் தொடர்ச்சியாக குறிப்பிட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், பிரபாகரன் மற்றும் ஏனைய குற்றவாளிகளுக்கு என்ன நடந்தது என்பதை அவதானிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் இதன்போது தான் எழுதிய பொய்யான செய்தி எது என வினவியுள்ள நிலையில், அதற்கு உறுதியான பதிலொன்று தேசபந்து தென்னகோனால் அளிக்கப்பட்டிருக்கவில்லை. ஓர் இடத்தில்
மட்டும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான செய்தியொன்று தொடர்பில் அவரால் குறிப்பிடப்பட்டிருந்தது என ஊடக அமைப்பு பொலிஸ் மா அதிபருக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் அண்மைக்கால சம்பவங்கள் தொடர்பில் அவதானிக்கும்போது,
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ‘பொய்யையே கூறுகின்றீர், இயற்கை வெல்லும்-கண்டிப்பாக, பிரபாகரன் மற்றும் ஏனைய குற்றவாளிகளின் நிலைமையை பாருங்கள் எனும் கருத்துப் பதிவு பதிலில் கடுமையானதொரு எச்சரிக்கை உள்ளடங்கியிருப்பதாக ஊடக அமைப்புக்களின் கூட்டு பொலிஸ் மா அதிபருக்கு சுட்டிக்காட்டியுள்ளது.