ஒரேயொரு காரணத்தை மாத்திரம் வைத்துக்கொண்டு தன்னை விசாரணைகளின்றி நியாயமற்ற முறையில் தடுத்து வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் நாடாளுமன்ற சபையில் தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த ரிஷாட், என்னை ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி கைது செய்தார்கள், 5 நாட்கள் மாத்திரமே என்னிடம் விசாரணைகளை மேற்கொண்டார்கள், இன்றுடன் 102 நாட்கள் நிறைவடைந்துள்ளன. 97 நாட்கள் என்னை தனியறையிலேயே வைத்துள்ளார்கள். 24 மணிநேரமும் அறையை மூடியே இருக்கிறது.
மலசலகூடத்திற்கு செல்வதற்காக மாத்திரம் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.அத்தோடு,நேரடியாகவே ஜனாதிபதியை அழைத்து தனது ஆதங்கத்தை ரிஷாட் இவ்வாறு பதிவு செய்தார். “ஜனாதிபதி அவர்களே, என்னை ஏன் கைது செய்தீர்கள் என OICயிடம் கேட்டபோது. எனது அமைச்சின் மேலதிக செயலாளரான பாலசுப்ரமணியமுடன் ஒன்றரை நிமிடம் தொலைபேசியில் உரையாடியதற்காக என்னை கைது செய்துள்ளதாக அவர் சொன்னார். வேறு எந்தவொரு காரணங்களும் இல்லையென தெரிவித்தாக ரிஷாட் குறிப்பிட்டார்.
ரிஷாட்டின் கருத்திற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பாலசுப்ரமணியம் தற்போது நாட்டில் இல்லையெனவும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.