நிதிக்கொள்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதே மத்திய வங்கியின் பிரதான செயற்பாடாகும். வங்கிக் கட்டமைப்பை ஒழுங்கு முறைப்படுத்துகின்ற மற்றும் மொத்த நிதிச் செயற்பாட்டின் கட்டமைப்பை ஒழுங்கமைக்கின்ற பொறுப்பு மத்திய வங்கிக்கே காணப்படுகின்றது. அரச நிதி தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வேண்டியது மத்திய வங்கியேயாகும். இவற்றை அரசியல் தலையீடுகள் இன்றியே மேற்கொள்ள வேண்டும். சுயாதீனமாக செயற்படுகின்ற மத்தி வங்கிகள் நாட்டு மக்களுக்கு சிறந்த பொருளாதார கட்டமைப்பை ஏற்படுத்திக்கொடுத்திருப்பதை உலக நாடுகளின் செயற்பாடுகளில் இருந்து உதாரணமாக பெற்றுக்கொள்ளலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் நம்பகத்தன்மைகக்கு பங்கம் ஏற்படும் வகையில் இருண்ட வரலாற்றுப் பதிவுகளை கொண்ட ஒருவரை ஆளுநராக நியமிக்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் செயற்பாடானது இந்த சந்தர்ப்பதில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைய வைக்கும் என்பதை தடுக்க முடியாது என்பது உண்மையே.
வரலாற்று ரீதியாக ஒப்புநோக்குநோக்குகின்ற போது உலக நாடுகளில் சில நாடுகள் மத்திய வங்கிகள் பொருப்பற்ற நிதிக்கொள்கை செயற்றிட்டம் மற்றும் நாட்டு மக்களுக்கு பகரமாக தமது நம்பிக்கைக்குரியவர்கள் நெருங்கியவர்களுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதன் ஊடாக செயற்பட்டு இருக்கின்றமை தெரிய வந்துள்ள விடயமாகும். ஆஜர்ன்டீனா, ஹங்கேரியா, சிம்பாப்வே, போன்ற நாடுகள் இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். இந்த நாடுகளில் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதோடு அதிக பணவீக்கத்தையும் சந்தித்து பாரிய பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றது.
அந்த நாடுகளில் இடம்பெறுகின்ற அதே விடயங்கள் தற்போது எமது நாட்டிலும் இடம்பெறுவதோடு மத்திய வங்கி குறித்த நம்பிக்கை முழுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.
இந்த நாட்டின் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட போகின்ற அஜிட் நிவாட் கப்ரால் ஒரு புறம் பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதோடு அதே அரசாங்கத்தின் நிதி இராஜாங்க அமைச்சராக இருந்தார். மத்திய வங்கி ஆளுநர் நியமித்தல் தொடர்பான சர்வதேச தரப்படுத்தலுக்கு அமைவாக அவரை இந்தப் பதவிக்கு நியமக்காமல் இருப்பதற்கு இது முக்கிய காரணமாக இருக்கின்றது.
எமது நாட்டின் கடனைத் திருப்பி செலுத்துகின்ற போராட்டத்தில் சிக்கிக்கொண்டிருக்கின்ற நிலையில், இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுக் காணப்படுவதோடு அந்நியசெலாவணி தட்டுப்பாடு காணப்படுகின்ற இந்த நிலையில் அஜிட் நிவாட் கப்ராலை மத்திய வங்கி ஆளுநராக பிரேரித்து அவரை நியமிக்கின்ற போது சர்வதேச நிதிச் சமூகத்திற்கு எமது நாடு குறித்தும் எமது நாட்டின் பொருளாதாரம் குறித்தும் குழப்பம் ஏற்படுவதோடு நம்பிக்கையீனத்தையும் வழுவாக உருவாக்குவதாகவும் அமையும்.
இதற்கு முன்னர் அஜிட் நிவாட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக செயற்பட்ட காலத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்கச் செய்த ஹெஜின் உடன்படிக்கை மற்றும் எமது நாட்டுக்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடுகளை ஏற்படுத்திய கிரோக்க முறிகள் விநியோகம் போன்ற குற்றச்சாட்டுக்களால் பாரிய கறுப்புப் புள்ளியை ஏற்படுத்தியிருக்கின்றார். தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் அறக்கட்டளை நிதியம் ஆகியவற்றின் பணத்தை முறையற்ற விதத்தில் கையாண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றது. அவர் மத்திய வங்கியின் ஆளநராக செயற்பட்ட காலத்தில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோப் அறிக்கைளிலும் இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.