MMDA பற்றிய ஒரு கண்ணோட்டம்!
“காதி நீதிமன்றங்களை ஒழிப்பது எங்களுடைய சவப்பெட்டியில் அடிக்கின்ற கடைசி ஆணியாகவே நான் கருதுகிறேன்” “( It is last nail on the coffin)
சட்டத்தரணி ஷிஹார் ஹஸனுடனான(Attorney at law) நேர்காணல்.
Newsnow தமிழுக்காக :அப்ரா அன்ஸார் (ஊடகவியலாளர்)
வினா 01:முஸ்லிம்களுக்கான தனியான காதி நீதிமன்றம் இருப்பதற்கான காரணம் என்ன?இதற்கான பின்னனி என்ன?இது போன்று ஏனைய இனத்தவர்களுக்கும் தனியான நீதிமன்றங்கள் இருக்கின்றனவா? அல்லது முஸ்லிம்களுக்கு மாத்திரம் உள்ள தனியுரிமையா?
விடை: இலங்கையில் காதி நீதிமன்றங்கள் முஸ்லிம்களுக்கென்று தனித்துவமாக இருக்கின்றது.மற்ற சமூகங்களுக்கு இவ்வாறு தனித்துவமான நீதிமன்றங்கள் இல்லை.ஏனெனில், மற்ற சமூகங்களினுடைய சட்ட விதிமுறை வேறு என்றாலும் சாதாரணமான நீதிமன்ற கட்டமைப்பினூடாக அவர்களுக்கு அந்த சட்டங்களை அமுல்படுத்த முடிகின்றது.கண்டிய சட்டம்,தேச வழமை சட்டம் இவற்றுக்கு இடையே அடிப்படை வேறுபாடுகள் பெரிதளவில் கிடையாது.ஆனால் முஸ்லிம்,விவாக விவாகரத்து சட்டம் என்பது அடிப்படையில் வேறுபாடுகளை கொண்டதாக இருக்கிறது.முஸ்லிம் விவாகரத்து நான்கு வகை அதாவது, கணவனின் விவாகரத்து உரிமை (Husband Rights of Divorce interms of thalaq), மனைவியின் விவகாரத்து உரிமை பஸாஹ்(Wife Rights of Divorce interms of fasah), குல்உ, முபாரத் இந்த அமைப்பு எதுவுமே சாதாரண சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படவில்லை.உதாரணமாக கூறினால் சாதாரண சட்டத்தின் கீழ் சுய விருப்பத்தின் பேரில் மேற்கொள்கின்ற விவாகரத்து (Consensual Divorce) என்று ஒன்று கிடையாது.அதாவது இரண்டு தரப்பினரும் கலந்தாலோசித்து விரும்பி விவாகரத்து செய்து கொள்கின்ற அமைப்பு இங்கு கிடையாது .ஆனால் இஸ்லாமிய சட்டத்தில் (Muslim marriage act) 1951 இல் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.அதனை தான் முபாரத் என்பார்கள்.அதே நேரம் எந்த ஒரு காரணமின்றி இந்த மாப்பிளையுடன் எனக்கு வாழ முடியாது என ஒரு பெண்ணுக்கு கூறி நட்ட ஈட்டை வழங்கி விவாகரத்து பெற்றுக் கொள்ள முடியும்.ஆனால் பொதுச் சட்டத்தில் இவ்வாறு கிடையாது.அதில் மூன்று காரணத்தை தவிர விவாகரத்து பெற முடியாது.அதாவது
முதலாவது சோரம் போதல், இரண்டாவது குணப்படுத்த முடியாத மலட்டுத்தன்மை, மூன்றாவது கெடுதல் நோக்கத்திற்காக விலகிச் செல்லுதல் (Malicious desertion) என்பனவாகும்.
கணவன் காசு தாரது இல்லை, இல்லாவிட்டால் வேறு ஏதாவது பிரச்சினை இவற்றுக்கு பொதுச் சட்டத்தில் விவாகரத்து பெற முடியாது.ஆனால் இல்லற வாழ்க்கையில் பாலியல் விடயத்தில் திருப்தி (sexual satisfaction) இல்லாவிட்டால் கூட முஸ்லிம் விவாகரத்து சட்டத்தில் தீர்வு இருக்கின்றது.எனவே இந்த விடயங்கள் கருத்தில் கொள்ளப்படுவதால் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தனித்துவமாகவும், முன்னனியில் இருக்கின்ற சட்டமாகவும் ,தூர நோக்குள்ள சட்டமாகவும் காணப்படுகின்றது.இதற்கு முக்கிய உதாரணமாக இப்போது matrimonial causes act என்ற சட்டத்தை கெளரவ நீதியமைச்சர் கொண்டு வருகிறார் .அந்த சட்டத்தின் கீழ் இரண்டு பேருக்கும் விருப்பமில்லாவிட்டால் விவாகரத்து செய்ய முடியும், சுய விருப்பத்தின் பேரில் விவாகரத்து செய்தல்(Consensual divorce), மணமுறிவு இந்த காரணங்களுக்காக விவாகரத்து செய்ய முடியும் என்பதை இப்போது தான் கொண்டு வருகிறார்கள்.ஆனால் இது முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் 1400 வருடங்களுக்கு முன்பே இருந்துள்ளது.எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு முஸ்லிம் விவாக ,விவாகரத்து சட்டம் தனித்துவமாக இருப்பதால் தான் காதி நீதிமன்ற அமைப்பு முஸ்லிம்களுக்கு என்று தனித்துவமாக இருப்பதாக நான் கருதுகின்றேன்.
வினா 02:1950களில் சீர்திருத்தப்பட்ட காதி நீதிமன்ற அமைப்பு தான் இன்றும் இருக்கின்றது.அதற்கிடையில் பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டிய நிலையில் தான் காதி நீதிமன்றங்கள் இருக்கின்றது.இடைக்காலப் பகுதியில் காதி நீதிபதிகளும் கூட காதி நீதிமன்ற முறையை துஷ்பிரயோகம் செய்திருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்திருக்கின்றது.தற்போது காதி நீதிமன்றங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு காதிகளால் ஏற்பட்ட தவறு மாத்திரமா ? வேறு காரணங்களும் இருக்கின்றதா?
விடை:காதி நீதிமன்றங்களில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.ஆனால் காதி நீதிமன்றங்களில் நடக்கின்ற அநீதிகள் , அசாதாரண நிலைக்கு காதி நீதிபதிகள் எந்தளவு பங்களிப்புச் செய்கின்றார்களோ அதே மாதிரி காதி நீதிமன்ற அமைப்பும் பங்களிப்பு செய்கின்றது.அதாவது காதிமார்களை சட்டத்தின் கீழ் தெரிவு செய்வதற்காக சரியான ஒழுங்குமுறையொன்று கிடையாது, காதியாக நியமிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட வயதெல்லை இருக்கிறது .அவ் வயதிற்கு மேற்பட்ட முஸ்லிமான ஆணாக ,ஒழுக்கமானவராக,பண்புடையவராக இருக்க வேண்டும்.இங்கு எவ்வாறு அவற்றை நிரூபிப்பது .கிராம உத்தியோகத்தரிடம் சென்று character certificate ஒன்றை பெற்றுக் கொண்டு வந்தால் போதும் அவர் நல்ல குணமுடையவர் என்று கருதப்படுகிறாரே ஒழிய சிறந்த குணமுடையவர் என்பதற்கு சட்டத்தில் சரியான வரைவிலக்கணம் கிடையாது.இது ஒரு முக்கியமான பிரச்சினை.அடுத்த விடயம் தான் காதிமார்களுடைய சம்பளம் .அவர்களுடைய சம்பளம் மாதத்துக்கு 13000 வழங்கப்படுகின்றது.அதனை சம்பளம் என்பதை விட ஒரு சலுகை கட்டணமாகவே (Allowance) வழங்கப்பட்டு வருகிறது.இந்த சம்பளத்துக்காக யாரு தான் முழு நேரமாக தொழில் புரிவார்கள்? , காதி நீதிபதிகளுக்கென்று ஒழுங்கான நீதிமன்றக் கட்டமைப்பொன்று கிடையாது. (1979 ) ஜுடிகேஜ் எக்ட்டின் கீழ தான் எந்தெந்த காதி நீதிமன்றங்கள் இருக்க வேண்டும் , அதன் கட்டமைப்பு என்பன இருக்கும்.இந்த சட்டத்திற்கு கீழ் காதி நீதிமன்றங்கள் பற்றி சொல்லப்படவில்லை அதனால் தான் காதியார்களின் வீட்டுவாசலிலும்,பெட்டிக் கடைகளிலும் காதி நீதிமன்றங்களை செய்து வருகின்றனர்.அவர்களுக்கு சரியான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை . அடுத்த விடயம் என்னவென்றால் நீதிபதிகளுக்கு இருக்கின்ற ஒழுக்காற்று கோவையொன்று காதி நீதிபதிகளுக்கு இல்லை.ஒழுக்காற்று வரையறை மிக முக்கியமானது எனினும் இங்கு அது குறைபாடகவே உள்ளது.காதி நீதிமன்றங்கள் தொடர்பான அனைத்து முறைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்கு நீதிச் சேவை ஆணைக்குழுவில் ஒரு அதிகாரி தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன் .அதை விட பரிதாபகரமான விடயம் தான் காதி நீதிமன்றத்திலிருந்து மேன் முறையீடு செல்வது காதிகள் உயர் சபைக்கு (Board of quazi) அதில் சட்டத்தரணிகளுக்கு காதி நீதிபதிகளின் முன்னாள் ஆஜராக முடியாது . காதி நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஆஜராக முடியாது என்பது பாரிய குறைபாடாக இருந்த போதிலும் அதனால் ஏற்படுகின்ற நன்மைகள் ஏராளமாக இருக்கின்றது.இங்கு காதிகள் உயர் சபைக்கு நான்கு வருடங்களாக செயலாளர் ஒன்று நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வினா 03: காதிகளுடைய தவறுக்காக ஒட்டுமொத்த காதி நீதிமன்றங்களையும் இல்லாதொழிக்க வேண்டும் என்பது நியாயமா? இலங்கையில் பிரதம நீதியரசர் ஒருவர் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது எனினும் நீதிமன்றங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்று யாரும் குரல் எழுப்பவில்லை.அந்த வகையில் காதிகளினுடைய தவறுக்காக காதி நீதிமன்றங்களை இல்லாதொழிக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?
விடை: இல்லை,
காதி நீதிமன்ற பிரச்சினைக்கு காதியார்கள் மிக முக்கிய காரணம் என்று கூறிவிட முடியாது.பொருத்தமான நன்கு படித்த, சமூக அந்தஸ்தில் இருக்கின்றவர்கள் , வேறொரு தொழில் புரிகின்றவர்கள் காதி நீதிபதிகளாக வருவதற்கு விண்ணப்பிப்பதற்கு எந்தவொரு சாத்தியக் கூறுகளும் இல்லை.காதி நீதிபதிகள் அனைவரும் பகுதி நேர கடமையாளர்களாகவே இருக்கின்றனர்.காதிகளாக இருக்கின்றவர்கள் வேறு தொழில்களை மேற்கொள்ள வேண்டி உள்ளனர், ஓய்வு பெற்ற உத்தியோகத்தர்களாக இருக்க வேண்டும் (ஆசிரியர், அதிபர், பள்ளித் தலைவர், ஆலிம்) இவர்களுக்கு தான் இதை செய்ய முடிகின்றது.இவர்களுக்கு உலக அறிவு சம்பந்தமான பிரச்சினைகள் , ஓய்வு பெற்ற பின்னர் அவர்கள் எந்தளவு தெளிவோடு இருக்கின்றார்கள் என்பதையும், பொதுவாக எல்லா தொழிலுக்கும் ஓய்வு இருக்கின்றது .அதாவது 60 வயதுக்கு மேல் அரச ஊழியராக கடமையாற்ற முடியாது, 65 வயதுக்கு மேல் உச்ச நீதிமன்ற நீதியரசராக இருக்க முடியாது.ஆனால் எங்களுடைய காதிமார்கள் 75-78 வயதுடன் இருப்பார்கள் அவர்களுக்கு நடக்க கூட முடியாது . இவர்கள் எப்படி சரியான சிந்தனைப் போக்குடன் செயல்படுவார்கள் ,நீதியை செலுத்துவார்கள் .நல்ல அந்தஸ்தில் இருக்கின்றவர்கள் இந்த 13000 சம்பளத்திற்காக முன்வர மாட்டார்கள்.எனவே காதிகளுக்கான சிறந்த வழிமுறைகளும் ,சம்பளமும் வழங்கப்பட்டால் காதி நீதிமன்றங்களை ஒழிக்க வேண்டிய தேவையில்லை.
வினா 04:காதி நீதிமன்றங்களில் சீர்திருத்தங்கள் அவசியம் . எனினும் அதனை முற்றாக இல்லாமல் செய்வது முஸ்லிம்களுடைய உரிமைகளில் ஒன்றை விட்டுக் கொடுப்பதை போன்றதாகும்.இதனை சீர்திருத்தம் செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் இதனை முற்றாக இல்லாது ஒழிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் பற்றி உங்களுடைய கருத்து என்ன?இக் கூற்றில் நீங்கள் உடன்படுகிறீர்களா?
விடை :
எனக்கு இதில் உடன்பாடில்லை.
நான் காதி நீதிமன்றங்களை ஒழிப்பதை எங்களுடைய “சவப்பெட்டியில் அடிக்கின்ற கடைசி ஆணியாகவே கருதுகின்றேன் (It is a last nail of coffin) “.இதை இல்லாமல் செய்தால் சவப்பெட்டிக்கு ஆணி அடித்து முழுமையாக எங்களுடைய முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை புதைத்து விடுவதாக அமைகின்றது.இதை முற்றாக ஒழிப்பதற்கான தீர்மானம் முன்னாள் நீதியரசர் ஸலீம் மர்ஸுபினுடைய அறிக்கையில் இருக்கவில்லை.இந்த யோசனையை நீதியமைச்சர் அலி சப்ரிக்கு அவருடைய ஆலோசகர்கள் யாராவது வழங்கியிருக்கலாம் .நான் அவரை தவறாக பார்க்கவில்லை எனினும் இதில் யாராவது தேவையில்லாது கயிறு கொடுத்திருக்கிறார்கள் என்று தான் கூற முடியும்.
நீதியரசர் சலீம் மர்ஸுபினுடைய அறிக்கை மிகத் தெளிவானது. அதனை சட்டமாக்கியிருந்தாலே இந்த சீர்திருத்தங்கள் சரியாக அமைந்து விடும்.தற்போது என்ன நடந்திருக்கிறது என்றால் காதி நீதிமன்றங்களை ஒழிக்க ஒரு புரளியை கொண்டு வந்துள்ளனர் முன்னால் நீதியரசர் சலீம் மர்ஸுபினுடைய அறிக்கையை எங்களுடைய சமூகத்தில் இருக்கின்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.காதி நீதிமன்றங்களை ஒழிப்பதானால் மற்ற விடயங்களை விட்டுக் கொடுத்தாலும் பரவாயில்லை என்றும் காதி நீதிமன்றங்களை வைத்துக் கொள்வோம் என்று கூறி சமூகம் இரண்டு அணியாக பிரிக்கப்பட்டுள்ளது.
வினா 05: காதி நீதிமன்றங்கள் இல்லாமல் செய்யப்பட்டு பொது நீதிமன்றத்தில் (General court ) இந்த விடயம் ஒப்படைக்கப்படுவது எந்த அளவு சாத்தியம்?இப் பிரச்சினைக்கு இது தான் தீர்வு என பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் நீதி அமைச்சர் பிடிவாதமாக இருப்பதன் பின்னனி என்ன?
விடை :
இதனை பொது நீதிமன்றத்தில் ஒப்படைப்பது தொடர்பான பிரேரனை கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு எங்களுக்கு அறிவிக்கவில்லை.காதி நீதிமன்றத்தை இல்லாதொழித்து பொது நீதிமன்றத்தில் ஒப்படைப்பது ஏகோபித்ததாகவும் ,ஏதாவது ஒரு அறிக்கையை வைத்து சமர்பிக்கப்பட்டதாக கிடையாது.
உச்ச நீதிமன்றத்தில் அதிகளவான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், மாவட்ட நீதிமன்றத்தில் 8000-10000 வரையான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கெளரவ நீதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்திருந்தார்.ஒரு வருடத்தில் ஆயிரம் வழக்குகளை ஒரு போதும் முடிக்க இயலாது.புதிய வழக்குகளை நிறுத்தி விட்டு பழைய வழக்குகளை எடுத்து செய்தாலும் அதற்கு மேலும் 8 வருடங்கள் போகும்.எனவே காதி நீதிமன்றங்களை பொது நீதிமன்றத்தில் ஒப்படைத்தால் குறிப்பிட்ட காலத்தில் எவ்வாறு நியாயங்களை எதிர்பார்ப்பது என்ற கேள்வி எழுகின்றது.காதி நீதிமன்றங்கள் பொது நீதிமன்றத்தின் கீழ் ஒப்படைக்கப்படுமாயின் எங்களுடைய வாழ்க்கை நாசம் என்ற நிலையில் தான் நீதிமன்ற அமைப்பு இருக்கின்றது.இப் பிரச்சினை பற்றி சட்டத்தரணிகள் கூட உடன்படுகிறார்கள்.எனினும் சமூக செயற்பாட்டாளர்கள், பெண் உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இதன் ஆழ அகலம் தெரியாமல் பொது நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர். ஆனால் சட்டத்தரணிகளுக்கு அவ்வாறில்லை அவர்கள் இதன் பாரதூரத்தை அறிந்திருக்கிறார்கள்.இதனை பொது நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு மேல் இடத்தில் இருந்து அழுத்தங்கள் இருக்கலாம், அவர்களுடைய கொள்கைகளை சமூகத்தில் திணிக்க எடுக்கின்ற முயற்சியாகவும் இதனை கருத முடியும்.இதில் மாவட்ட நீதிமன்றங்களுக்கு கூட போகாத சட்டத்தரணிகள் இருக்கலாம்.சுய இலாபம் தேடக் கூடிய சட்டத்தரணிகளும் இதில் இருக்கலாம் என்பது மறுப்பதற்கில்லை.எனினும் பொது நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று பரிந்துரைப்பவர்களில் குறைந்தது 20 பேர் கூட இல்லை .ஏன் இந்த புரளியை கிளப்பி விட்டார்கள் என்பது தான் இங்கிருக்கும் மிகப் பெரிய கேள்வி.
வினா 06 :பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் வேண்டும் என்று கூறுகின்றனர் .காதிநீதிமன்ற தீர்ப்பினால் பெண்கள் மாத்திரம் அல்ல ஆண்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனினும் பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் தங்களுடைய சொந்த பிரச்சினை போன்று சமூக பிரச்சினையை கையாள்வது எந்தளவு பாரதூரத்தை ஏற்படுத்தும் என நீங்கள் நினைக்கிறீர்களா?
விடை : காதி நீதிமன்றங்களில் இருக்கின்ற நடைமுறை பிரச்சினை காரணமாக நிச்சயமாக பெண் ,ஆண் இருதரப்பும் பாதிக்கப்படுகிறார்கள்.ஆனால் பெண்கள் கூடுதலாக பாதிக்கப்படுவதற்கு காரணம் கணவன் விட்டுட்டு போனால் பிள்ளைகளை பராமரிப்பவர்கள் பெண்களாகத் தான் இருப்பார்கள்.இதில் கணவன் சரியாக பராமரிப்பு பணத்தை வழங்காவிட்டால், விட்டுட்டு போனாலும் இது என்னுடைய பிள்ளைகள் என்று நினைக்காவிட்டால் , கணவனுக்கு வசதி இல்லாவிட்டால் கூட கடைசிக்கு பாதிக்கப்படுவது பெண்ணாகவே இருக்கின்றது.அந்த பெண் நல்லவளாக அல்லது கொடுமைக்காரியாக இருந்திருக்க முடியும் என்றாலும் கணவன் விட்டுப் பிரிந்து போன பின்பு தன் பிள்ளைகளை பராமரிப்பது தாயாகவே உள்ளது.அந்த தாய்க்கு அப் பிரச்சினைகளை சமாளிக்க முடியாது போகின்ற கட்டத்தில் காணொளிக்கு முன்னாள் வந்து பேச தொடங்குவார்கள்.பொதுவான சட்டத்தில்(General law ) கூட கிட்டத்தட்ட 25 வருடங்களாக மாற்றம் வேண்டும் அதில் பிரச்சினை இருப்பதாக National law commission தெரிவித்துள்ளது.ஆனால் பொது சட்டத்தை மாற்றுவதற்கு எந்த குரலும் எழுப்பப்படவில்லை.இன்னும் சிலருக்கு இந்த சட்டத்தினால் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.ஆனால் சமூகப் பிரச்சினையை சமூகப் பிரச்சினையாக பார்க்காது இதற்கு ஆண் ஆதிக்கம் உள்ளவர்கள் தான் காரணமென்றும் இதில் உலமாக்கள் தான் பிடிவாதமாக இருப்பதாகவும் அபாண்டமாக புரளிய கிளப்பிவிட்டு இதில் குளிர்காய்கின்ற ஒரு கூட்டம் இருக்கின்றது.அடுத்த சமூகத்திலிருக்கின்ற ஆணாதிக்கத்தை போல எங்களுடைய சமூகத்தில் இருக்கின்ற ஆணாதிக்கம் அதிகமாகவே இருக்கிறது ஏனெனில் எங்களுடைய பெண்களும் சில முக்கியமான இடங்களில் விடுகின்ற பிழைகள்,சில நேரம் திருமணம் முடிக்கின்றதிலிருந்து ஆரம்பமாகின்றது . பெண்ணின் தந்தை, தாய் அதிலும் குறிப்பாக தாய் பிடிவாதமாக இருப்பார்கள்.” நீ இவரைத் தான் திருமணம் முடிக்க வேண்டும்” என பணிப்பார்கள்.இப்படி பல சிக்கல்கள் இருக்கின்றது.உண்மையிலே எங்களுடைய சமூகத்தில் இருக்கின்ற பெண்களுக்கு குழி தோண்டுவது பெண்களாகவே இருக்கின்றார்கள்.எனவே இந்த விடயத்தை கருத்திற் கொள்ள வேண்டும்.
வினா 07 : முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட நீதியரசர் சலீம் மர்ஸுப் குழுவினர் முன்வைத்த அறிக்கையில் காதி நீதிமன்றங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களும் இருக்கின்றன.இவற்றை சீர் செய்தால் போதும் என்று பெரும்பாலானோர் ஒற்றுமைபட்டிருந்தனர்.இந்த நிலையில் அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் , தடைகள் என்ன?
விடை : முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்ஸுப் அவர்களுடைய அறிக்கையில் உள்ள சில தீர்மானங்களை நடைமுறைப்படுத்த பெரிய பிரச்சினையாக இருந்தது எங்களுடைய முஸ்லிம் சமுதாயமே தான்.ஒரு கூட்டம் இந்த அறிக்கையில் இன்னும் எதிர்பார்த்தார்கள்.மற்றுமொரு கூட்டம் இதனை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றார்கள்.தற்போது நாங்கள் இருக்கின்ற நிலையில் இரண்டு பக்கமும் சில விடயங்களை விட்டுக் கொடுக்காவிட்டால் இந்த சட்டத்தை முழுமையாக இழக்கின்ற ஒரு கட்டத்திற்கு வர முடியும்.எனவே இது விடயத்தில் அனைவரும் நிதானமாக செயல்பட வேண்டும்.
முஸ்லிம் விவாக ,விவாகரத்து சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று அடுத்த சமூகத்திலிருக்கின்ற சில இனவாத சக்திகளின் கதைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற எங்களுடைய சமூகத்தில் உள்ள சிலர் நடந்து கொள்கிறார்கள்.அந்நிய சக்திகளின் இலக்கு காதி நீதிமன்றங்களை இல்லாதொழிக்க வேண்டும் என்பதை எங்களுடைய சமூகத்தில் இருக்கின்றவர்களுக்கு புரிவதில்லை.
பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் காணொளிக்கு முன்னாள் வந்து சொந்தக் கதைகளையும்,சோகக் கதைகளையும் சொல்கின்றார்கள்.இதனை கேட்டு விட்டு காதி நீதிமன்றங்களை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர்.அடுத்த சமூகத்தவர்களுடைய கதைய கேட்கின்றார்களே ஒழிய எங்களுடைய கருத்துக்களை கேட்பதற்கு அவர்கள் தயாரில்லை.சீர்திருத்தங்களை செயற்படுத்துவதற்கு மிக முக்கியமாக இருந்த தடை எங்களுடைய சமூகத்தில் தான் இருந்தது.உண்மையிலே சீர்திருத்தங்கள் சமூக நலனுக்காக வர வேண்டும் என்று நினைக்கின்ற ஒரு கூட்டம் இருக்க, இன்னொரு பக்கம் சீர்திருத்தங்கள் வேறு யாருடையோ தேவைக்காக நடத்தப்பட வேண்டும் என்று ஒரு கூட்டம் ,இது எதற்கென்று தெரியாமல் கோஷம் எழுப்புகின்ற ஒரு கூட்டத்திற்கு மத்தியில் தான் இந்த சீர்திருத்தங்கள் சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றதென நான் கருதுகிறேன்.
முற்றும்.