வாழ்வில் பொறுமை இருந்தால் வாழ்க்கை உனக்கு அடிமை.பொறுமை இல்லை என்றால் வாழ்க்கைக்கு நீ அடிமை.உலகில் ஒவ்வொன்றுக்கும் விசேட தினங்கள் அனுஷ்டிக்கப்படுவது போன்று பொறுமையின் சிறப்பை உணர்த்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16 ஆம் திகதி சர்வதேச பொறுமை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.”பொறுமை கடலினும் பெரிது , பொறாமை நஞ்சினும் கொடியது” என்பதை இன்று பலர் உணரும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.வாழ்க்கையில் சோதனைகளை எதிர்கொள்ளாத மனிதர்களே இல்லை.சோதனைகளின் போது பொறுமையை கடைபிடிப்பவர் வெற்றி பெறுபவர் ,பொறுமையை இழப்பவர் தோல்வியடைவர்.பொறுமையை சோதிக்கும் காலங்களில் கண் மூடிக் கொள்ள வேண்டும்.கண் திறந்தால் இங்கே ஆபத்து உங்களுக்கும் எனக்கும் தான்.
அழகிய பொறுமை என்பது தமக்கு துன்பம் ஏற்படும் போது உணர்ச்சி வயப்படாமலும், கோபம் கொள்ளாமலும் இருக்கும் மனநிலையாகும்.மற்றவர் தம்மை இகழும் போதும் , நீண்ட தாமதங்கள் ஏற்படும் போதும் , பிரச்சினைகள் ஏற்படும் போதும் , தொடர் துன்பங்கள் வரும் போதும் , சில அசாதாரண சூழ்நிலைகளின் போதும் அமைதியாக இருக்கும் மனநிலை என்று கூற முடியும்.இந்த குணம் மனிதனை பல்வேறு உடல் நோய்களிலிருந்தும், மன நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.
அறிவியல் பார்வையில் பொறுமை.
பரிணாம உளவியலிலும் , அறிவாற்றல் நரம்பு அறிவியலிலும் பொறுமையை பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மனிதனும் , விலங்குகளும் கொண்டிருக்கும் முடிவு செய்யும் திறமையை பற்றி ஆராய்ந்த போது ,சிறிது நேரம் காத்திருந்தால் சிறிய நன்மை அடையலாம் என்றும், நீண்டகாலம் காத்திருந்தால் பெரிய நன்மைகளை அடையலாம் என்றும் இரண்டு விருப்பத் தேர்வைக் கொடுக்கும் போது ,சிறிது நேரம் காத்திருந்து சிறிய நன்மை என்பதையே பெரும்பாலும் தெரிவு செய்கிறார்கள்.
திருக்குறளின் பார்வையில் பொறுமை.
“அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரப் பொறுத்தல் தலை”
தன்னைத் தோண்டுபவரை பொறுத்துத் தாங்கிக் கொள்ளும் நிலம் போல, தம்மை இகழ்ந்து பேசுபவரைப் பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான அறமாகும்.
பொறுமை என்ற சொல் ஒரு பாடகரின் நாற்காலியின் இரு திட்டமாகும்.இருக்கை உயர்த்தப்படும் போது அது நிற்கும் நபர்களுக்கு ஆதரவாக செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொறுமை என்ற வார்த்தைக்கான இரண்டு பேச்சு வழக்கை மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.அதாவது, “தனிநபரில் சகிப்புத்தன்மையும் விடா முயற்சியும் தீர்ந்துவிடும் போது சூழ்நிலைக்காக காத்திருக்க முடியாமல் போகும் போது பொறுமையை இழப்பது.”
” பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு” என்ற மற்றொரு வெளிப்பாடும் உள்ளது.
பைபிளின் பார்வையில் பொறுமை.
பொறுமையாக இருப்பதற்கான செயல் கிறிஸ்தவத்தில் பரிசுத்த ஆவியின் நற்பண்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.கடவுளை நம்புதல், புரிந்து கொள்வதும் , கடவுளின் வாக்குறுதிகளை பெறுவதுமாகும்.
பொறுமை, தூய்மை, விடா முயற்சி இம் மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை ,பொறுமையே பொறாமையை வெல்லும் என்பது உறுதி,பொறுமையாக இருப்பவன் எப்போதும் அழிய மாட்டான்,சுகம், துக்கம் என்ற இரண்டையும் ஒன்றாகக் கருதுவதே பொறுமை,பொறுமையுள்ளவர்கள் மலைகளை மிதித்தே கடந்து விடுவார்கள்,பொறுமை தான் உண்மையான திறமை, பொறுமையை விட சிறந்த ஆயுதம் கிடையாது, பொறுமையை விட மகிழ்ச்சி வேறெதுவும் கிடையாது,பொறுமையே சிறந்த பரிந்துரைக் கடிதம், பொறுமை என்பது மகிழ்ச்சியின் தாயாகும் முதலான பொன்மொழிகள் பொறுமை எனும் சொல்லுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் பார்வையில் பொறுமை.
இறை நம்பிக்கையாளர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் (என்னிடம்) உதவி தேடுங்கள். இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’. (திருக்குர்ஆன் 2:153)
பொறுமை என்பது இறைகுணம். இறைவனிடமிருந்து வரும் ஒரு அருள் குணம். இதற்கு எதிர்மறையான குணங்கள் என்று வரும்போது அவசரம், ஆத்திரம், உணர்ச்சிவசப்படுதல், கோபம் போன்றவை அடங்கும்.எங்கும், எதிலும், எப்போதும், பொறுமை அவசியம். குறிப்பாக, இறை நம்பிக்கையாளர்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். இதனால்தான் இறைவன் தன்னிடம் உதவி கோரும்போது ‘முதலில் பொறுமையைக் கொண்டும், பிறகு தொழுகையைக் கொண்டும் உதவி தேடுங்கள்’ என்று கூறியிருக்கிறான்.
நபியவர்கள் தமது வாழ்க்கையில் பலவிதமான சோதனைகளையும், துயரங்களையும் சந்தித்த போதெல்லாம் அழகிய முறையில் பொறுமையைத் தாமும் கடைப்பிடித்து, தமது தோழர்களையும் கடைப்பிடிக்கச் செய்தார்கள்.துன்பங்கள், சோதனைகள் வரும் காலகட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் பொறுமையை விட கோபம் வரும்போது கடைப்பிடிக்கப்படும் பொறுமையே சிறந்த செயல்.
கோபம் வரும் போது நிதானம், மென்மை, பொறுமை அவசியம். நிதானம் இழந்த கோபத்தால் சமூக நல்லிணக்கம் சீர் கெடுகிறது; குடும்ப உறவு சீர் குலைகிறது; நட்பு வட்டாரத்தில் விரிசல் ஏற்படுகிறது. கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக எதிர்மறையான, மோசமான விளைவுகளை உண்டாக்கி விடுகிறது.
“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘எனக்கு அறிவுரை கூறுங்கள்’ என்றார்.
‘கோபத்தை கைவிடு’ என நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள். அவர் பலமுறை கேட்ட போதும் ‘கோபத்தை கைவிடு’ என்றே நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
வாழ்க்கையில் என்னைச் சுற்றி எங்களைச் சுற்றி எத்தனையோ ரசிக்கத்தக்க நிகழ்வுகள் இருக்கின்றன. அதைப் பார்த்து ரசிக்க ஒரு வாய்ப்பைத் தருகிறது பொறுமை. எந்தவிதச் சலசலப்பும் இன்றி பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் தான் நன்மதிப்பைச் சம்பாதிக்கின்றனர். வாழ்க்கையில் பல சிகரங்களைத் தொடுகின்றனர்.
‘பதறாத காரியம் சிதறாது’ என்பது போல நிதானத்தை உருவாக்கிக்கொள்ளும்போது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வாழ்க்கையின் சிக்கல்களைக் களையவும் பல வழிகள் பிறக்கின்றன.
‘A man who is a master of Patience is the master of everything else’ என்கிறார் முன்னாள் அமெரிக்க அரசியல் தலைவர் ஜியோர்ஜ் சேவில். பொறுமையைக் கைவசமாக்குவோம்! வாழ்க்கையில் சாதிப்போம்.
பொறுமையில்லாது வீழ்ந்து போனவர்களின் சரித்திரத்தை விட, பொறுமையால் வாழ்ந்து வரலாற்றை தேடிப் படிப்போம். புராண, வரலாற்றில் மட்டுமின்றி நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதர்களினாலும் பொறுமை காத்து வாழும் மனிதர்களை மதிப்போம்.
அப்ரா அன்ஸார்.