லத்தீப் பாரூக்
எகிப்தின் இராணுவ சர்வாதிகார ஆட்சியாளர் அப்துல் பத்தாஹ் அல் சிசியின் ஆட்சியின் கீழ் எகிப்திய மக்கள் அனுபவித்து வரும் மனித உரிமை நெருக்கடிகள் விடயத்தில் கவனம் செலுத்துமாறு சுமார் 200 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள இந்தக் கடிதத்தில் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைப் பேரவை கூட்டத்தொடரின் முன்னோடியாக எகிப்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி திடமான விசாரணைகளை முன்னெடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் பற்றி அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதில் சர்வதேச சமூகம் தொடர் தோல்விகளைத் தழுவி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த தோல்விகள் மட்டுமல்லாது எகிப்திய அரசுக்கு வழங்கப்பட்டு வரும் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் அங்கு இடம்பெற்று வரும் துஷ்பிரயோகங்கள் பற்றிப் பேச தயக்கம் காட்டி வருகின்றமை எகிப்திய அதிகாரிகளுக்கான விடுபாட்டு உரிமையை அல்லது அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையைமேலும் விரிவாக்கியுள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனது நாட்டின் நிலை குறித்து அங்கு முன்னர் தடுத்து வைக்கப்பட்டிருந்த றாமி சாத் என்பவர் ‘எகிப்து ஒரு அச்சம் மிக்க குடியரசு’ என வர்ணித்துள்ளார்.
இராணுவ ஜெனரலான அப்துல் பததாஹ் அல் சிசி இஸ்ரேலின் பூரண அனுசரனையுடன் அமெரிக்க இஸ்ரேல் நாசகார சக்திகளால் தூண்டிவிடப்பட்ட சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் உதவியோடு பதவியில் அமர்த்தப்பட்டவர்.
சவூதி ஆரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைத் ஆகிய மூன்று நாடுகளும் எகிப்தில் சிசி பதவிக்கு வர வழியமைக்கும் வகையில் அங்கு செயற்கையான உணவுத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு என இன்னும் பல நெருக்கடிகளை உருவாக்க 11 பில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்லாமிய ஆதரவு சகோதரத்துவ அமைப்பின் ஆதரவுடன் முதல் தடவையாக அந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக மக்கள் ஆதரவுடன் பதவிக்கு வந்த ஜனாதிபதி முஹம்மத் அல் முர்ஷியின் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்திலேயே இந்தத் தட்டுப்பாடுகள் அங்கு ஏற்படுத்தப்பட்டன.
சிசி பதவியேற்றது முதல் அவரை விமர்சித்த ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பலர் சித்திரவதைகளை அனுபவித்து வருகின்றனர். இன்னும் பலர் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பழிவாங்கல்களுக்கு அஞ்சி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
எகிப்தின் மனித உரிமைகள் சட்டத்தரணி ஒஸாமா பயோமி என்பவரும் பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களில் ஒருவராவார். கய்ரோ நகரில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளது முதல் காணாமல் போயுள்ளதாக ‘மிட்ல் ஈஸ்ட் ஐ’ என்ற பதிப்பில் இம்மாதம் தகவல் வெளியாகி உள்ளது. அவர் உணர்வுபூர்வமான பல வழக்குகளைக் கையாண்டு வந்தவர்.
அவரது கட்சிக் காரர்களின் வழக்கு சம்பந்தப்பட்ட கோவைகள் தற்போது அரசாங்க அதிகாரிகளால் கைப்பற்றகப்பட்டுள்ளன.
அவரது லெப்டொப் கம்பியூட்டர், கையடக்க தொலைபேசி உற்பட ஏனைய இலத்திரனியல் கருவிகளும் அதிகாரிகளால் கைப்பற்ப்பட்டுள்ளதாக மனித உரிமை குழுக்கள் தெரிவித்துள்ளன.
சிசியை உண்மையிலேயே விமர்சித்தவர்கள் அல்லது விமர்சிக்கலாம் என்று கருதப்பட்டவர்கள் என பலர் சட்டத்தரணிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினர் காணாமல் போயுள்ளனர்.
சிலர் எவ்வித விசாரணைகளும் குற்றச்சாட்டுக்களும் இன்றி நாற்கணக்காகவும், மாதக்கணக்காகவும், வருடக்கணக்காகவும் கூட தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்தக் காலப்பகுதியில் அவர்கள் பெரும்பாலும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
மிக மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர். பலரிடம் அவர்கள் எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் பல குற்றங்களைப் புரிந்ததாக பலவந்தப்படுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
எகிப்திய பாதுகாப்பு அதிகாரிகளின் அடக்குமுறை செயற்பாடுகளை ஐரோப்பிய மனித உரிமை ஆணைக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது. அதிகாலை வேளையில் மக்களது வீடுகளை சுற்றி வளைத்தல், பெண்களையும் வயோதிபர்களையும் சுற்றி வளைத்தல், தனிநபர்களது பணத்தையும் சொத்துக்களையும் சூறையாடல் என எகிப்தில் தொடரும் மனித உரிமை மீறல்கள் பலத்த கண்டனத்துக்கு ஆளாகியுள்ளன.
சட்டத்தரணிகளின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான முன்னணி விடுத்துள்ள அறிவிப்பில் எகிப்தில் சுமார் 50 சட்டத்தரணிகள் விசாரணைகளுக்கு முந்திய கட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஹொஸாம் மொனாபி மொஹமட் ஸலாம் என்ற 29 வயது நபர் பத்ர் விமான சேவையின் து4690 விமானத்தில் ஜனவரி 12ம் திகதி கார்ட்டூமில் இருந்து இஸ்தான்புல் நோக்கிப் பயணமாகி உள்ளார்.
அது செல்லும் வழியில் எகிப்தின் தென் பகுதியில் உள்ள லக்ஷர் விமான நிலையத்தில் தரை இறங்கி உள்ளது. இந்த நிமிடம் முதல் அதில் பயணம் செய்த ஹொஸாம் மொனாபி மொஹமட் ஸலாம் காணாமல் போயுள்ளார்.
ஸலாம் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் தீவிர ஆதரவாளர். 2016 முதல் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறி அவர் சூடானில் புகலிடம் கோரி இருந்தார். எகிப்தில் ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தப்பட்ட அமைப்பே சகோதரத்துவ அமைப்பாகும். 2013 முதல் அதன் ஆதரவாளர்களும,; ஆதரவாளர்கள் என நம்பப்படுபவர்களும் வகை தொகையின்றி கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள். அரசை விமர்சிப்பவர்கள் என பலர் ஒன்றில் நாட்டுககுள் வரும் போது அல்லது நாட்டை விட்டு வெளியேறும் போது எகிப்திய விமான நிலையங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எகிப்தின் நவீன வரலாற்றில் இடம்பெற்று வருகின்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களாக இன்றைய மீறல்களை சர்வதேச அமைப்புக்களும் நாடுகளும் வர்ணித்துள்ள நிலையில், அதுபற்றி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாத ஒரு நபராக சிசி காணப்படுகின்றார்.
ஐரோப்பிய மனித உரிமை ஆணைக்குழுவின் 2022 உலக அறிக்கையில் எகிப்தின் பாதுகாப்புப் படைகள் பெரும்பாலும் விடுபாட்டு உரிமையோடு செயற்படுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வழமையான முறையில் அவர்கள் சட்ட விரோத கைதுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் காணாமல் ஆக்கப்படுகின்றனர்.
உண்மையான அரசியல் செயற்பாட்டாளர்களும் அவ்வாறு சந்தேகிக்கப்படுகின்றவர்களும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
சாதாரண குடிமக்களுக்கும் இந்தக் கதி ஏற்படுத்தப்படுகின்றது. சிசியின் இராணுவ சதிப் புரட்சி இடம்பெற்ற கையோடு அழித்தொழிக்கும் ஒரு அரசியல் திட்டத்தை அவர் அமுல் படுத்தத் தொடங்கினார்.
இன்னொரு ஜனநாயக எழுச்சிக்கான எல்லா சாத்தியங்களையும் முற்று முழுதாக அழித்தொழிப்பதே இதன் பிரதான நோக்கமாகும்.
எகிப்தின் இன்றைய இராணுவ சர்வாதிகாரி ஜெனரல் அப்துல் பத்தாஹ் அல் சிசி.
இதற்குத் தேவையான காட்டு மிராண்டி சட்டங்கள், படைபல பிரயோகங்கள், ஊடக பிரசாரங்கள், ஊழல்மிக்க சட்டத்துறை என எல்லாமே உருவாக்கப்பட்டன. எகிப்து இன்று மிக மோசமானதோர் நிலையில் இருப்பதாகத் தான் பல்வேறு குறிகாட்டிகளும் சுட்டிக் காட்டுகின்றன. முன்னாள் ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சிக் காலத்தில் கூட இவ்வாறானதோர் நிலைமை ஒரு கட்டத்தில் கூட அங்கு காணப்படவில்லை என்றே அவை குறிப்பிடுகின்றன.
சதிப்புரட்சிக்குப் பிந்திய அரசு படைகள் பல பாரிய அளவிலான படுகொலைகளைப் புரிந்துள்ளன. மிக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை.
இம்மாத முற்பகுதியில் கைது செய்யப்பட்டது முதல் காணாமல் ஆக்கப்பட்டுள்ள எகிப்தின் மனித உரிமை சட்டத்தரணி ஒஸாமா பயோமி
காட்டுமிராண்டித் தனமான பல சட்டங்கள் அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. எகிப்திய சிறைச்சாலைகள் அதன் கொள்ளளவையும் தாண்டி நிரம்பி வழிகின்றன. எகிப்திய சிறைச்சாலைகள் முறையை இன்று விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.
எதிர்தரப்பு ஊடக வலையமைப்புக்கள் அனைத்தையும் சிசி இன்று மூடி வைத்துள்ளார். எல்லா ஊடகங்களிலும் தானும் தனது ஆட்சியும் சார்ந்த பிரசாரங்கள் மட்டுமே முன்னெடுக்கப்டுவதற்கு இது வழியமைத்துள்ளது. பழிவாங்கலுக்கான ஒரு ஆயுதமாக அவர் சட்டத்துறையையும் பயன்படுத்தி வருகின்றார். அரசியல் எதிர்சக்திகள் அனைத்தும் இன்று அழிக்கப்பட்டுள்ளன.
எகிப்தின் தென்பகுதி விமான நிலையம் ஒன்றில் தரையிறங்கிய ஹொஸாம் ஸலாம் என்பவர் தரை இறங்கியது முதல் காணாமல் போயுள்ளார் என மனித உரிமை குழுக்கள் அறிவித்துள்ளன.
இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு இன்று தலைமறைவாகி விட்டது. அதற்கு அடுத்த படியான காரசாரமான அரசியல் குழுக்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. சிசிக்கு சவாலாக இருப்பார்கள் எனக் கருதப்படும் எல்லோருமே அச்சுறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் மீதான சிசியின் வெளிப்படையான தாக்குதல்கள் காரணமாக எகிப்தை ‘ஒரு திறந்த வெளி சிறைச்சாலை’ என்று சர்வதேச மன்னிப்புச் சபை வர்ணித்துள்ளது.
எகிப்திய அரசுக்கு செல்வமும் செல்வாக்கும் மிக்க சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் என்பனவற்றில் இருந்து கிடைக்கும் பில்லியன் கணக்கான டொலர்கள் உதவிகளையும் தாண்டி மேலும் கோடிக்கணக்கான டொலர்கள் சர்வதேசக் கடன்களாகவும் கிடைத்து வருகின்றன.
இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் வலுவான ஒரு போராட்டக் கட்டத்துக்கு வந்துள்ளது.
சிசியின் கீழ் மக்களுக்கு இடையிலான செல்வங்களின் இடைவெளி மிகப் பெரியதாக மாறி உள்ளது. இந்த நிலைமையின் இயற்கையான உப உற்பத்தியாக பணவீக்கமும் உச்சத்தைத் தொட்டுள்ளது. இதனால் ஒரு சராசரி எகிப்திய குடிமகனின் அன்றாட தேவைகளை அடைந்து கொள்வது கூட பெரும் சிரமமான ஒரு விடயமாக மாறி உள்ளது.
இந்த நிலைமை மேலும் மோசமடையலாம் என்ற அச்சமே இன்று நிலவுகின்றது.
பாதுகாப்புத்துறை வல்லுனரும் பிரபல எழுத்தாளருமான றொபர்ட் ஸ்பிரிங்போகின் மதிப்பீட்டின் படி ஒரு தோல்வி கண்ட பொருளாதாரம் என்ற வரிசையில் லெபனானை அடுத்து எகிப்தின் பெயரும் இடம்பெறலாம்.
குறிப்பாக சிசியின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தால் இது நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தனது அகண்ட இஸ்ரேல் திட்டத்துக்குள் இஸ்ரேல் அமுல் படுத்த முயலும் மத்திய கிழக்குக்கான திட்டமும் இதுதான்.
(முற்றும்)
Any country or leader supportive of USA,Israel , Egypt and India cannot be punished in any of International organizations is an unwritten norm.