சர்வதேச சமூகம் இலங்கையை பக்கச்சார்பற்ற கண்ணோட்டத்துடன் பார்த்து, அதன் நிலைப்பாட்டை ஏற்று, எதிர்வரும் காலங்களில் நாட்டைப் பற்றிய ஒரு முடிவுக்கு வரும் என இலங்கை அரசாங்கம் நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது வழக்கமான அமர்வு இடம்பெற்றது.
இதன்போது, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கான எந்தவொரு நீண்டகால தீர்வும் இலங்கையின் கலாச்சாரம் மற்றும் அதன் மக்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்று பீரிஸ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
‘இலங்கை தொடர்பான வரைவு அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அலுவலகம் பெற்றுக்கொள்ளவுள்ளோம். நாங்கள் எங்கள் பதிலை வடிவமைத்து அடுத்த ஐந்து நாட்களுக்குள் (பெப்ரவரி 19இற்குள்) சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவுக்கு அனுப்புவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச சமூகத்திடம் இருந்து நியாயத்தை எதிர்பார்க்கிறோம். உலக அமைதிக்கு அல்லது உலக ஒழுங்கிற்கு இலங்கை ஏதேனும் பிரச்சினைகளை ஏற்படுத்துமா? சகவாழ்வு என்பது ஒரு சிக்கலான விடயம், நீண்ட கால யுத்தத்திற்கு உள்ளான எந்தவொரு நாட்டிற்கும் இந்தப் பிரச்சினைகள் உள்ளன.
இந்தப் பிரச்சனைக்கு ஒரே இரவில் தீர்வு இல்லை. நீண்ட கால தீர்வை ஏற்படுத்த வேண்டுமானால், அது நமது கலாச்சாரம் மற்றும் மக்களுடன் ஒத்துப்போகும் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, போர்க்குற்றம் தொடர்பாக எந்தச் சூழ்நிலையிலும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த முடியாது எனவும் இவ்விடயம் தொடர்பாக சர்வதேச சட்டங்கள் மிகத் தெளிவாக உள்ளமையால் இலங்கைக்கு எந்தவிதமான ஆபத்தும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அப்போதைய அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட ஆதாரமற்ற போர்க்குற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் அவர் இதன்போது, அதிருப்தி வெளியிட்டார்.
இதேவேளை, பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது வழமையான அமர்வுக்கு முன்னதாக, இந்த வார இறுதியில் இலங்கைக்கான ஐநா மனித உரிமைகள் பேரவையின் தூதுப் பிரதிநிதிகளை பீரிஸ் சந்திக்கவுள்ளதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.