“நீரின்றி அமையாது உலகு“ என்ற வள்ளுவனின் கூற்றினை யாராலும் மறுக்க முடியாது. இந்த பூமியில் வாழும் அத்தனை உயிரினத்திற்கும் நீர் இன்றியமையாத தேவைகளுள் ஒன்றாக இருக்கிறது.
குறைந்த அளவில் தரையை தோண்டினாலே நிலத்தடி நீர் கிடைத்த காலங்கள் மாறி, இன்று பல அடி ஆழம் தோண்டினாலும் வறண்ட நிலையிலேயே இருக்கிறது பூமி. இது வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை மிகுந்த கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனை அறிந்த உலக நாடுகள் இணைந்து, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தினத்தை கடைப்பிடிக்கின்றனர்.
அதிகரித்து வரும் தொழிற்ச்சாலைகள், இயற்கை வளங்களை சுரண்டல், தண்ணீருக்கான பயன்பாடு அதிகரித்தல் போன்றவைதான் இந்த காலக்கட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது.
சில நாடுகளில் முன் கூட்டியே மாற்று ஏற்பாடாக கடல்நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் முறையை விரைவாகவே துவங்கிவிட்டனர். இன்று மார்ச் 22 ஆம் தேதி தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாடு குறித்த ஐ.நா பொதுச் சபையின் மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் தண்ணீர் தினம் கடைப்பிடிப்பது பற்றிய யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று தண்ணீர் தினம் என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. 1993 முதல் உலக தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அருந்தலாகக் கிடைக்கின்ற நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச நீர்வள தினத்தின் கருப்பொருள் நீர்வளத்தை மதிப்பிட்டு மிகப்பயனுள்ள வகையில் அதனை முகாமைத்துவம் செய்தலாகும்.
இலங்கையில் வழமையாக உலக நீர் தினத்தில் நீர் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அமைச்சரின் செய்தியும் பத்திரிகைகளில் விசேட அனுபந்தங்கள் மற்றும் கட்டுரைகளும் வெளியாகுவதைத் தவிர, மக்கள் மத்தியில் பெரியளவில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய உருப்படியான செயற்திட்டங்கள் எதுவுமே முன்னெடுக்கப்படுவதில்லை. நீர்ச் சிக்கனம், நீர்த் தூய்மை, நீர்ச் சேமிப்பு குறித்து விழிப்புணர்வும் அக்கறையும் எம்மத்தியில் எந்தளவுக்கு இருக்கிறது என்பது மனச்சாட்சியைத் தொட்டுப்பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் பிரகாசமாக விளங்கும். வீதியோரக் குழாயில் நீர் வீணே வடிந்து கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் தாமதித்து நின்று அக்குழாயைப் பூட்டுவதற்கு எம்மில் எத்தனைபேர் உண்மையில் மானசீகமாக அக்கறை காட்டுகிறோம். நீர் விவகாரத்தில் இது எமது மனச்சாட்சிக்கு ஒரு அமிலப் பரீட்சையாகவே அமைந்துவிடுகிறது.
இலங்கையின் நீர்வள முகாமையின் வரலாறு பெரும்பாலும் வழங்கல் வரலாறாகவே இருந்தது. பண்டைய நீர்ப்பாசனக் குளங்கள் தேவையான நீரை விநியோகித்தன. இலங்கையின் தற்போதைய நீர் நிலைமை பற்றி விவசாயத்துறை நிபுணர் கலாநிதி சி.ஆர். பானப்பொக்கே நமது நீர்ப்பாவனை பற்றி நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீர்ப்பாவனை குறித்து நமது பழக்கவழக்கங்களும். பண்பாடும் மாறவேண்டும். இன்றேல் அடுத்த நூற்றாண்டில் நாம் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்று கூறியுள்ளமை சிந்திக்கத்தது.
தற்போது இலங்கையில் நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID தாபனம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை குடிநீரை விநியோகிக்கின்றது.
உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.
உலக நீர் தினம் நினைவு கூறப்பட்டால் மட்டும் போதாது. அதன் தாற்பரியம் பேணப்படல் வேண்டும். மனித வாழ்வோடும் பின்னிப் பிணைந்தது தண்ணீரின் வரலாறு. உலக முன்னேற்றத்துக்கேற்ப, சனத்தொகைப் பெருக்கத்துக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நீரின் தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. அதே வேளை தூய நீரின் எல்லை அருகி வருகிறது. நாம் நாமே நினைக்காத வரையில் நீர்ப்பற்றாக்குறை நீங்குவது சாத்தியமல்ல. நீரை வீணே விரயம் செய்வதும், எல்லை இன்றி பயன்படுத்துவதும், நீர்ப்பற்றாக்குறை நிதமும் நிலவவே வழி செய்யும்.
எனவே, நீர் எங்கள் உயிருக்கு நேர் என்று நாம் கருதி செயல்பட வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு பவுண் தங்கம் என எண்ணி நாம் நடந்து கொள்ள வேண்டும். நீர் இன்றேல் பார் இல்லை என்று நாம் கருத வேண்டும். அனைத்து வளங்களுக்கும் தாய்வளம் தண்ணீர். ஊர் வளம் பெற, பார் வளம் பெற நீர் வளம் காப்போம் என இந்த தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்.