எரிவாயுக்கான கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
நேற்றிரவு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக எரிவாயு விநியோகஸ்தர் தெரிவித்தார்.
கெரவலப்பிட்டியவில் உள்ள லிட்ரோ எரிவாயு சேமிப்பு களஞ்சியசாலையிலிருந்து இறக்குதல், நிரப்புதல் மற்றும் விநியோகம் ஆகியவை நேற்று இரவு ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு தெரிவித்துள்ளது.
இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் எரிவாயு விநியோகம் இன்று வழமைக்குத் திரும்பும் எனவும் டொலர் நெருக்கடி காரணமாக முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்களால் இலங்கையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இலங்கை கடற்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் இருந்து 2500 மெற்றிக் தொன் எரிவாயு இறக்கப்பட்டதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே எரிவாயு விநியோகம் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவித்த அவர், பிற்பகல் வேளையில் நுகர்வோருக்கு தேவையான எரிவாயு கையிருப்புகளை நிறுவனத்தினால் வழங்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக நுகர்வொர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன நேற்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒருபோதும் இல்லாத அளவுக்கு உலக சந்தையில் எரிவாயு விலை பெருமளவில் உயர்வடைந்துள்ளதாகவும், இந்நிலையில் அதன் விலையை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.