ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் குழுவை இன்று சந்தித்தார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் சங்யொங் ரிஹி இன் பிரதிப் பணிப்பாளர் ஆன் மரி க்ளுட்வோப் மற்றும் நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஆகியோர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
திங்கட்கிழமை இலங்கைக்கு வந்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், பொருளாதாரம் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் சமீபத்திய மீளாய்வு மற்றும் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களின் சமீபத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்ட மதிப்பீடுகள் பற்றிய விபரங்களைப் பற்றி விவாதிப்பதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், இன்று காலை இடம்பெற்ற இந்த லந்துரையாடலின் விபரங்கள் இன்னும் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் அமைச்சரவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றைய சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலை நடத்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அதற்கமைவாக எதிர்வரும் மாதம் பேச்சு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.