பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசாங்கம் வாக்கெடுப்புக்கு முன்னரே தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.
அதற்கமைய பாகிஸ்தானில் பிடிஐ கட்சிக்கு அளித்த ஆதரவை எம்.கியூ.எம் கட்சி விலக்கிக்கொண்டதை அடுத்து, இம்ரான் கானின் கட்சி பெரும்பான்மை இழந்தது.
இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை(வியாழக்கிழமை) விவாதம் நடக்கிறது.
இதனையடுத்து 3ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் எம்.க்யூ.எம் கட்சி (முத்தாஹிதா குவாமி இயக்கம்) அறிவித்துள்ளது.
இதனால் இம்ரான்கானின் அரசாங்கம் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே பெரும்பான்மையை இழந்தது.
ஆட்சியை தக்கவைக்க பெரும்பான்மைக்கு 172 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில் இம்ரான்கானுக்கு 164 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளதால் ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலகக் கோரி பாகிஸ்தானில் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெறுகின்றன.
இதேவேளை ‘வெளிநாட்டு சக்திகள், உள்நாட்டு அரசியல்வாதிகளை பயன்படுத்துகின்றதாகவும், வெளியுறவு கொள்கையை நிர்ணயிப்பதில் பணம் ஒரு ஆயுதமாக இருப்பதாக கூறிய இம்ரான் கான், வெளியுறவுக் கொள்கையை சீர் செய்ய போவதாகவும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்