ஈஸ்டர் தாக்குதலின் 3ஆவது ஆண்டு நினைவு தினம் குறித்து தேசிய ஷூரா சபை விசேட அறிக்கை!

Date:

ஏப்ரல் 21, 2019 ஞாயிற்றுக்கிழமை நடந்த கொடூரமான தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை நினைவுகூர்வதில் அனைத்து இலங்கையர்களுடன் இலங்கையில் உள்ள தேசிய அளவிலான 15 முஸ்லிம் அமைப்புகளின் குடை அமைப்பான தேசிய ஷூரா சபை இணைந்து கொள்கிறது.

இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்தினரும், முக்கியமாக கிறிஸ்தவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் குடும்பங்களுக்கு தனது அனுதாபத்தை அது தெரிவித்துக் கொள்கிறது.

இதன்போது, தாக்குதல் தொடர்பில் தேசிய ஷூரா சபை பின்வரும் கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறது,

1. முஸ்லிம் பெயர்களைக் கொண்ட சிலரால் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு அது முரணானது.
தற்கொலையை அல்லது தற்கொலை தாக்குதல்களை அது தடைசெய்யும் அதேவேளை, தற்காப்புக்காக மட்டுமே எதிர்த்துத் தாக்குவதற்கு அது மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியை வழங்குகிறது.

2. இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் வரலாறு நெடுகிலும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுடன், குறிப்பாக கிறிஸ்தவர்களுடன் சமாதானமாக இணைந்து வாழ்ந்துள்ளனர். ஈஸ்டர் தாக்குதல்கள் நமது நேசத்துக்குரிய நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் அமைதியான சகவாழ்வுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தவறான ஆனால், தோல்வியுற்ற தாக்குதலாகும்.

3. தாக்குதல் நடந்தபோது இலங்கையிலும் சர்வதேச அளவிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களும் அதிர்ச்சியடைந்தனர். மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் தங்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன. குண்டுதாரிகளின் இறந்த உடல்களைக் கூட முஸ்லிம்களின் அடக்கஸ்தலங்களில் அடக்கம் செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று அவர்கள் ஏகமனதுடன் கூறினர்.

4. சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் ஃபத்வா கவுன்சில்கள் ஐ. எஸ்.ஐ.எஸ். என்பது இஸ்லாத்துக்கு எதிரான போராளிக் குழு என்றும் அவர்களின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் முற்றிலும் இஸ்லாத்திற்கு எதிரானவை என்றும் உறுதியாகக் கூறியுள்ளனர் என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.

5. மேற்படி தாக்குதல்களை நடாத்திய முஸ்லிம் பெயர் தாங்கிகள் அதிகாரத்தை அடைவதற்கு சிலரால் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என பேராயர் மல்கம் ரஞ்ஜித் அவர்கள் உட்பட பல இலங்கையர்களும் பலதடவை கூறியுள்ளனர். இத்தாகுதலுக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தோன்றுவதாகவும் சுதந்திரமான விசாரணை தேவை என்றும் பேராயர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

6. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சில தீவிரவாத அமைப்புகள் தான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்காரர்களை கடும்போக்காளர்களாக மாற்ற வழிவகுத்ததாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஆகிய இரண்டும் அடையாளப்படுத்தியிருந்தன. இரு அரசாங்கங்களும் அவர்களில் எவரையும் விசாரிக்காமல் பேராயர் கூறியது போல் முஸ்லிம்கள் மீது மட்டுமே வழக்குத் தொடரப்பட்டது.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக சிறையில் இருக்கும் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்களுக்கு விடுதலை வழங்கப்படாமல் அவர்களுடன் தொடர்பான விசாரணைகள் மிகவும் மெதுவான வேகத்தில் நடைபெறுகின்றன. அவர்களின் குடும்பங்கள் மனச்சோர்வு, விரக்தி மற்றும் நிதி நெருக்கடியில் இருப்பது மட்டுமல்லாமல், அந்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாறும் அபாயமும் உள்ளது.

2010 ஆம் ஆண்டு முதல் இலங்கை முஸ்லிம்களும் அவர்களது மத, கலாசார விழுமியங்களும் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் நாட்டில் தொடர்ச்சியான வெறுப்பூட்டும் பேச்சுக்கள், நியாயமற்ற அவதூறுகள் மற்றும் தாக்குதல்களுக்கு உட்பட்டுள்ளன. இவை முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதத்திற்குள் தள்ளியிருக்கின்றன.

ஏராளமான பள்ளிவாயில்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. இதன் நிமித்தம் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர், ஆனால், அவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் எவருக்கும் எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (Pவுயு) கீழ் வழக்குத் தொடரப்படவில்லை. அதே நேரத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானோர் வழிபடும் அல்லாஹ்விற்கு பெரும்பான்மை சமூகத்தின் தீவிரவாதிகள் கொடும்பாவி செய்து எரித்து இழிவுபடுத்தினர். புனித குர்ஆனின் பிரதிகள் தீவிரவாதிகளால் எரிக்கப்பட்டாலும் அந்த குற்றவாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த அநீதிகளால் முஸ்லிம்கள் மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும், வேதனையும் அடைந்தனர்.

தேசிய ஷூரா சபை பின்வரும் விடயங்கள் தொடர்பில் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது: –

(அ) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு அவர்களின் இனம், மதம் என்பவற்றை பொருட்படுத்தாமல் நீதி வழங்கப்பட வேண்டும்.

(ஆ) உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக பாராளுமன்றத் தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய முறையில் தண்டிக்கப்பட வேண்டும்.

(இ) தடுப்புக் காவலில் உள்ளவர்கள் மீதான விசாரணைகள் இனியும் தாமதிக்காமல் முடிக்கப்பட்டு, நிரபராதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். மேலும் நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆதாரங்கள் உள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இலங்கையிலுள்ள நீதியை உறுதிப்படுத்த முயலும் அனைத்து அதிகாரிகளுக்கும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க தேசிய ஷூரா சபை என்றூம் தயாராகவுள்ளது.

அன்புடனும் சகிப்புத்தன்மையுடனும் ஒரே தாய்நாட்டின் குடிமக்கள் என்ற பாதுகாப்பான உணர்வோடும் வாழ்வோமாக எனவும் தேசிய ஷூரா சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...