அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு இரண்டு நிபந்தனைகளின் கீழ் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி குறித்த பிரேரணைக்கு ஆதரவைப் பெறுவதற்கு இதுவரை ஏனைய அரசியல் கட்சிகளை அணுகவில்லை என அந்தக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஏனைய பிரதான அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறத் தவறினால் பாராளுமன்றத்திற்குள் அரசாங்கத்திற்கு வெற்றி கிடைக்கும் எனவும் அது அதிகாரத்தின் மீதான தனது பிடியை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் இரண்டு நிபந்தனைகளுக்கு இணங்கும் பட்சத்தில் மாத்திரமே தமது கட்சி அதற்கு ஆதரவை வழங்கும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
‘முதலாவதாக, பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் 113 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.
இரண்டாவதாக, தற்போதைய அரசாங்கத்தை கலைத்த பின்னர் அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உடன்பட வேண்டும்,’ என்று அவர் கூறினார்.