யாழ்ப்பாணத்தில் மீன் பிடித் தொழில் மிக முக்கியமான தொழிலாக இருந்துவருகிறது. 2017ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுமார் 21,200 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொழிலைச் சார்ந்திருக்கிறார்கள். ஆனால், தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஒட்டி எழுந்திருக்கும் எரிபொருள் தட்டுப்பாடு இந்தத் தொழிலுக்கு மிகப் பெரிய சவாலாக எழுந்து நிற்கிறது.
யாழ்ப்பாணத்தின் குரு நகர் கடற்கரைப் பகுதியில் படகுகளுக்கு மண்ணெண்ணை வாங்க சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாகக் மீனவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களது நாளின் பெரும்பகுதி மண்ணெண்ணைய்க்காக காத்திருப்பதிலேயே போய்விடுகிறது.
“எங்கிட்ட ரெண்டு போட் இருக்கு. ஆறு தொழிலாளி போவார். தொழில் ஓடினால்தான் அவங்களையும் பார்க்கலாம். இங்க எண்ணைக்கு வந்தா பிரச்னை. எங்க போனாலும் கேன்ல தரவே மாட்டாங்க. அல்லபிட்டியிலிருந்து ஆட்டோ பிடிச்சுக்கொண்டு வந்தா ஆயிரம் ரூபாய்… டீசல் கிடைக்காட்டியும் கொடுக்க வேண்டும். அதைக் கொடுத்துட்டு தொழிலாளிக்கும் கொடுக்க இயலுமா?” என்கிறார் மண்ணெண்ணைக்காகக் காத்திருக்கும் அல்லபிட்டியைச் சேர்ந்த மீனவரான தேவராஜா.
இங்கு சிறு சிறு படகு உரிமையாளர்கள் இருக்கிறார்கள். தங்கள் படகுகளில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி வரும் வருவாயைப் பிரித்துக்கொள்கிறார்கள். இப்போது எரிபொருள் விலையேற்றத்தாலும் மீன்களை வாங்க ஆட்கள் குறைவாக வருவதாலும் இதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
“நாங்கள் சராசரியாக கடலுக்குப் போய்வந்தால் முப்பதாயிரம் ரூபாய்க்கு வித்தாத்தான் எரிபொருள் செலவை கழித்துவிட்டு மீதியை தொழிலாளரும் முதலாளியும் பகிர்ந்துகொள்ள முடியும். மீன் விலை குறைந்திருப்பதால் இப்போது 25,000தான் கிடைக்கிறது. இதில் 15,000 எரிபொருள் உள்ளிட்ட செலவுகளுக்காகப் போய்விடும். மீதமுள்ள பத்தாயிரத்தில் தொழிலாளர்களுக்கு ஆறாயிரம் போய்விடும். மீதமுள்ள 4 ஆயிரத்தை வைத்து என்ன செய்வது. இந்த நிலை தொடர்ந்தால் நாங்கள் இந்தத் தொழிலையே விட்டுவிட வேண்டியதுதான்” என்கிறார் குருநகர் கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜூலியன் சகாயராஜா.
யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான மீன் பிடித் தொழில் நடந்து வருகிறது. காக்கைத் தீவு பகுதியில் சிறகு வலை மூலம் மீன் பிடிக்கும் தொழில் மிகப் பரவலாக இருக்கிறது. ஆழமில்லாத கடல் பகுதியில் நீண்ட கம்பிகளை ஊன்றி, வலைகளை இணைத்து, மீன் பிடிக்கும் இந்த முறைக்கு ஒரு தடவைக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. விரிக்கப்பட்ட வலை சுமார் 15 நாட்களுக்குக் கடலிலேயே இருக்கும். மீனவர்கள் தினமும் சென்று அந்த வலையைக் கண்காணித்து வர வேண்டும்.
ஆனால், தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் கடலுக்குச் சென்று பார்க்க முடிகிறது. இதற்கு நடுவில் வேறு படகுகள் வலையை அறுத்து, மீன்கள் வெளியேறிவிட்டாலோ, கம்பங்கள் சாய்ந்து மீன்கள் வெளியேறிவிட்டாலோ பெரும் இழப்புதான்.
இவ்வளவு சிரமத்திற்கு நடுவில் மீன் பிடித்து வந்தாலும் இத்தனை நாட்களாக பிடித்துவந்த மீனுக்கு நல்ல விலையாவது கிடைத்து வந்தது. ஆனால், இப்போது வாகனங்களுக்கான டீசல் தட்டுப்பாட்டின் காரணமாக, கொள்முதல் செய்யும் வாகனங்களே மிகக் குறைவாக வருகின்றன. இதனால், மீன்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை.