ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு செல்ல வேண்டாம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு அவர்கள் ஆலோசனை வழங்கியதாக நாணயக்கார ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் இந்த நேரத்தில் பொருத்தமானதாக இருக்காது என அவர்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாறாக ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் 21ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் முன்வைக்க வலியுறுத்துவோம் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜனாதிபதியுடனும் எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரேரணைகள் ஒன்றை முன்வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை தேசிய நிறைவேற்று சபையை ஸ்தாபித்தல், கடன் கால அவகாசம் கோருதல், எந்த சலுகையும் பெறாத அமைச்சரவையை அமைத்தல் மற்றும் 21ஆவது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் ஆகிய திட்டங்கள் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.