(File Photo)
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்கள் அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் மணித்தியாலங்களில் அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை குழு நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுவிற்கும் இடையில் நேற்று இரவு இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அலரிமாளிகையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பின் போது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பிரதீப் உந்துகொட,
எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு நெருக்கடிகளுக்கான தீர்வுகளை அடுத்த சில நாட்களுக்குள் அரசாங்கம் வழங்க முடியும் என்றார்.
எதிர்வரும் மணித்தியாலங்களுக்குள் புதிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்படவுள்ளதுடன், புதிய செயற்திட்டத்தின் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் கைப்பற்றுவதற்கு விருப்பம் தெரிவிக்காததால், தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களை கொண்டு புதிய அமைச்சரவை நியமிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
நேற்றிரவு பிரதமருடனான சந்திப்பில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை.
அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போது பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வன்முறைகள் அதிகரித்துள்ளமை மற்றும் நிலைமையை தணிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.