தற்போதைய தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த அழைப்பை எதிர்க்கட்சியான ஐக்கிள மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, ‘பொதுமக்களின் வேண்டுகோள் கோட்டா வீட்டிற்கு செல்ல வேண்டும், நாங்கள் அந்த போக்கை ஆதரிப்போம் மற்றும் ராஜபக்ஷக்களின் கீழ் எந்த பதவியையும் ஏற்க மாட்டோம்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ அரசின் பதவிக்காலத்தின் கடைசி சில நாட்கள் இது என்று கூறிய அவர், மீண்டும் ஆட்சியைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்த வகையிலும் உதவாது என்றார்.
‘பொதுமக்கள் கோட்டாவை வீட்டிற்கு செல்லுமாறும், ராஜபக்ஷக்களை வீட்டிற்கு செல்லுமாறும் அழைப்பு விடுக்கின்றனர். பொதுமக்களின் அழைப்புக்கு நாங்கள் துணை நிற்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ அல்லது ராஜபக்ஷக்களுடன் இருந்தவர்களுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்திக்கு விருப்பமோ தேவையோ இல்லை என ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்துடனும் பொதுமக்களின் அங்கீகாரத்துடனும் மட்டுமே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
‘அது ஜனாதிபதித் தேர்தலாகவோ, நாடாளுமன்றத் தேர்தலாகவோ அல்லது உள்ளூராட்சித் தேர்தலாகவோ இருக்கலாம். பொதுமக்களின் ஆசியுடன் மட்டுமே ஆட்சி அமைப்போம், எனவும் குறிப்பிட்டுள்ளார்..
இதேவேளை கோட்டபாய ராஜபக்ஷ இராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்த அவர், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்த்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.