கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மத்தியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையகத்திற்கு வந்ததையடுத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு தமது வாக்குகளை காட்டிக் கொடுக்க வேண்டாம் எனவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவாக செயற்படுமாறும் கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை, ஜனாதிபதியுடன் இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுயேச்சைக் குழு புறக்கணிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலை புறக்கணிக்க 11 அரசியல் கட்சிகளின் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல பதவிகளில் இருந்தும் சாந்த பண்டார நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார விவசாய இராஜாங்க அமைச்சராக நேற்று நியமிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.