நேற்று காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டம் பின்னர் வன்முறையாக மாறிய கொழும்பு நகரில் தற்போது அமைதியான சூழல் நிலவி வருகிறது.
நாட்டில் ஏனைய பகுதிகளிலும் அமைதி நிலவி வருவதை அவதானிக்க முடிகின்றது. நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், கொழும்பு நகரில் இனி எவ்வித குழப்பங்களும் ஏற்பட வாய்ப்பில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களும் வீதிகளும் தற்போது வெறிச்சோடியுள்ளன.
அதுமட்டுமல்லாது வழமையாக பரபரப்பாக இயங்கும் கொழும்பு நகரம் அமைதியான சூழ்நிலையில் காணப்படுவதுடன் அலரி மாளிகைக்கு அருகே பொலிஸாரும் இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் அசாதாரண நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக இலங்கை முழுவதும் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படையினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் விமான நிலையத்துக்கு பயணிப்பவர்கள் தங்களுடைய பயணச் சீட்டுகள் ஊரடங்கு கால அனுமதிப்பத்திரமாக பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் தமது தொழிலுக்கு செல்ல நிறுவன அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.