(File Photo)
அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில் பாலமுனை வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தச்சம்பவம் தொடர்பில் ‘நியூஸ் நவ்’ பொலிஸ் ஊடகப்பிரிவிடம் வினவியபோதே இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தலைக்கவசம் அணியாமல் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டினர். அப்போது மோட்டார் சைக்கிள் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தையடுத்து, சம்பவ இடத்தில் திரண்ட அப்பகுதி மக்கள் சுமார் 700 பேர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை தாக்கியதுடன் சோதனைச் சாவடிக்கும் தீ வைத்துள்ளனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்டவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தாக்குதலில் காயமடைந்த 07 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 3 சிவில் பாதுகாப்புப் படை வீரர்களும் அக்கரைப்பற்று மற்றும் அம்பாறை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் பொத்துவில் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.