கொவிட்-19 வைரஸுக்கு எதிராக நான்காவது தடுப்பூசி மருந்தை அறிமுகப்படுத்த தொற்றுநோயியல் பிரிவு முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இன்று தகவல் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதன்போது, சுகாதார அமைச்சின் கொவிட்-19 தொடர்பான நிபுணர் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசியை அக்குழு திங்கட்கிழமை (8) பரிந்துரைத்துள்ளது. நான்காவது டோஸ் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கும், நோயெதிர்ப்பு குறைபாடு மற்றும் நாட்பட்ட கோளாறுகள் உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.
எவ்வாறாயினும், மேற்கூறிய வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசியைப் பெறுவதற்கு வற்புறுத்தப்படவில்லை, இருப்பினும், தடுப்பூசி டோஸ் பெற தகுதி பெற, மூன்றாவது டோஸ் வழங்கப்பட்ட பின்னர் குறைந்தது மூன்று மாதங்கள் கடந்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
அதேவேளை கொவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் ஏற்கனவே 12 முதல் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பாடசாலை மாணவர்களுக்கு வழங்க நிபுணர் குழுவால் பரிந்துரைகள் வழங்கப்பட்டன,’ என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இதேவேளை இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து கருத்து தெரிவித்த அவர்,
அனைத்து வைத்திய நிபுணர்களும் பொதுவான பெயர்களுடன் மருந்துச்சீட்டுகளை எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.
புற்றுநோய் மருத்துவமனைகள்இ லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை மற்றும் காஸல் ஸ்ட்ரீட் மருத்துவமனை ஆகியவை கடுமையான மருந்து தட்டுப்பாட்டைச் சந்திக்கின்றன என்று அவர் மேலும் கூறினார்.