நாட்டில் அடுத்த மூன்று மாதங்களில் உணவு மற்றும் எரிபொருள் கையிருப்பு முடிந்து விடும் ஆபத்து இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது, கமத்தொழில், மருத்துவச் சேவை, கைத்தொழில் உற்பத்தி ஆகியன பாதிக்கப்படும் விதத்தில் மோசமான உச்சத்தை நோக்கி நெருங்கி வருவதாகவும் கம்மன்பில கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் பிரதிபலன்கள் மோசமாக மாறக் கூடும். அடிப்படையாக தற்போது இலங்கையில் வெளிநாட்டு அந்நிய செலாவணிகள் எதுவும் இல்லை. விரைவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து இருப்பதுடன் இலங்கை மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் கடனுதவியில் பெற்றுக்கொண்டது. அதுவும் முடிவடைந்து விடும்.
அந்த எரிபொருளை தற்போது முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து ரக எரிபொருளும் முடிந்து விடும் ஆபத்து காணப்படுகிறது.
கடந்த ஆண்டு இரசாயன பசளையை இறக்குமதி செய்வது என எடுத்த அழிவான முடிவு காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலைமையும் உருவாகி வருகிறது. சேதனப் பசளை மூலம் மாத்திரம் பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், அறுவடை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன் காரணமாக பழங்கள் மற்றும் மரக்கறிகளில் தன்னிறைவு அடைய முடியாமல் போயுள்ளதுடன் அரிசி உட்பட பிரதான உணவு பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. எதிர்காலத்தில் இலங்கையின் பயன்பாட்டுக்காக அரிசி, சோளம், மரக்கறி, பழங்கள், தானியங்களை இறக்குமதி செய்ய நேரிடும். எனினும் அந்நிய செலாவணி கையிருப்பில் இல்லை என்பதால், அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இனி வரும் மாதங்களில் கட்டாயம் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.