ரயில்வே ஊழியர்கள் பணியிடங்களுக்குச் செல்வதற்கு எரிபொருள் பற்றாக்குறையால் எதிர்வரும் நாட்களில் புகையிரதங்கள் ரத்து செய்யப்படலாம் போக்குவரத்து பிரதிப் பொது முகாமையாளர காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
அதேநேரம், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் நேற்றும் (28 மற்றும் 29) பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலைமை எதிர்வரும் காலங்களில் இன்னும் மோசமடையலாம் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களின் பிரகாரம் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டுமே பஸ்களை இயக்க முடியும் எனவும் அதன் பின்னர் பொது போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகும் எனவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
ஆனால், எரிபொருள் கிடைக்காததால் பேருந்து கட்டணத்தை உயர்த்தப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டீசல் வழங்குவதற்கு உரிய நடைமுறைகளை பின்பற்றாவிடின் எதிர்வரும் நாட்களில் பஸ்கள் சேவையில் இருந்து விலகும் நிலைக்கு தள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தை மீளாய்வு செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், தனியார் பஸ்களுக்கு எரிபொருளை வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
50 லிட்டர் எரிபொருளை பெற, பஸ்களுக்கு போதாது என, பல நாட்களாக வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது என, பஸ் சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
குறுகிய தூர பொதுப் போக்குவரத்தை இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழங்குவதாகவும், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை நிறுத்த வேண்டியுள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.