இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரதும் வீட்டு விபரங்களும் நீக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் முகவரிகள் மற்றும் தொலைபேசி விபரங்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அலுவலக தொலைபேசி எண், மற்றும் கையடக்கத் தொலைபேசி எண்கள் மற்றும் தற்போதைய பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 225 உறுப்பினர்களின் முகவரிகள் இடம்பெற்றிருந்தன.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் போது பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.