மும்பை கோகுல்தாம் காலனி அருகே உள்ள சாக்கடையில் எலிகளிடம் இருந்து 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சுந்தரி பிளானிபெல் என்பவர் கோகுல்தாம் காலனி பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.
அவர் தனது தங்க நகைகளை வங்கியில் அடகு வைக்க சென்றபோது வழியில் இருந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு, தான் கொண்டு சென்ற உணவுப் பையை தந்துள்ளார்.
அதில் தவறுதலாக நகைகளையும் வைத்துள்ளார். சுந்தரி வங்கிக்கு சென்று பார்த்தபோதுதான் நகை, தான் கொண்டு வந்த பையில் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து அவர் திரும்பி சென்று குழந்தைகளை தேடியுள்ளார்.
ஆனால் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகு அவர் காவல்நிலையத்தை தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். இதையடுத்து பொலிஸார் உதவியுடன் தேடியதில், அந்த குழந்தைகள் இருக்கும் இடம் தெரியவந்தது.
அவர்களிடம் விசாரித்ததில் அந்த பையை குழந்தைகள் குப்பையில் போட்டுவிட்டதாக கூறினர். குப்பையை சென்று பார்த்தபோது அதில் நகைகள் இல்லை. இதை தொடர்ந்து பொலிஸார் சிசிடிவி உதவியுடன் பார்த்தபோது, குப்பையில் இருந்து சில எலிகள் அந்த உணவுப்பையை எடுத்துக்கொண்டு சாக்கடைக்குள் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சாக்கடைக்குள் தேடியபோது அந்த பை கிடைத்தது. அதில் இருந்த நகைகளும் பத்திரமாக இருந்தன. அந்த நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நகைகளை பொலிஸார் சுந்தரியிடம் ஒப்படைத்தனர்.
இதேவேளை பொலிஸார் அந்த குப்பை கிடங்கின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பையில் எலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொலிஸார் எலியை துரத்தினார்கள் ஆனால் அது அருகில் உள்ள சாக்கடையில் குதித்தது. இறுதியில் தங்க நகைகள் இருந்த பையை பொலிஸார் கண்டுபிடித்தனர்.