நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு நேரடியாகக் காரணமானவர்கள் மீண்டும் ஒரு நாட்டின் பொறுப்பை ஏற்க முன்வருவதால் நாடு மேலும் பாதாளத்தில் விழும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் என்று கூறிக்கொண்டு பிரதமர் தலைமையிலான குழுவொன்று நாட்டின் பொறுப்புக்களை ஏற்க முன்வந்தாலும், பழைய பழக்கங்களை உடைத்தவர்களே நாட்டின் பொறுப்பை ஏற்றுள்ளனர் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள போதிலும் நாட்டு மக்களிடமிருந்தோ அல்லது சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கோ எவ்வித அங்கீகாரமும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.