நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த முன்னாள் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா, தொலைக்காட்சி முன் தோன்றி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து தொலைக்காட்சியில் அவதூறான வகையில் சர்ச்சை கருத்துகளை பேசியதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நுபர் சர்மா மீது எதிர்பலை கிளம்பியது.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அவர் மீது வழக்குகளும் தொடரப்பட்டன. இதனையடுத்து அவர் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால், நாடு முழுவதும் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒன்றாக்கி டெல்லியில் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஜுலை 1) விசாரணைக்கு வந்தது. அப்போது, நுபுர் சர்மா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணீந்தர் சிங், இந்த விவகாரம் தொடர்பாக நுபுர் சர்மா மன்னிப்பு கேட்டுவிட்டதாக தெரிவித்தார்.
இதற்கு, “நுபுர் சர்மா மீண்டும் தொலைக்காட்சி முன் தோன்றி, நாட்டு மக்கள் முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும்.
நீதித்துறை தொடர்பான விஷயங்களை பேச நுபுர் சர்மாவுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சியினருக்கும் என்ன வேலை?” எனவும் உச்ச நீதிபதி சூரியகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தற்போது நாட்டில் நிலவும் அசாதராண சுழல் அத்தனைக்கும், இந்த ஒற்றை பெண்மணியே (நுபுர் சர்மா) பொறுப்பேற்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தார்.
மேலும், நுபுர் சர்மாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்னர்.