ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் முதல்வராக உஸ்தாத் அகார் முஹம்மத் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை கலாபீட பரிபாலனச் சபைத் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம் இன்று (11/8/2022) வழங்கிவைத்தார்.
பல தசாப்தங்களாக இந்நிறுவனத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவிற்குப் பின்னர் பணிப்பாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.
அந்த வகையில், கலாபீடத்தின் முதல்வராக உஸ்தாத் அகார் முஹம்மத் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் எனும் பதவி, புதிய கட்டமைப்பின் கீழ் கலாபீடத்தின் தலைமை நிர்வாகப் பதவியாக அமைகின்றது.
1982 ஆண்டு கலாபீடத்தில் ஒரு விரிவுரையாளராக இணைந்துகொண்ட உஸ்தாத் அகார் முஹம்மத் பின்னர் பல வருடங்கள் கல்வித்துறைப் பீடாதிபதியாக கடமையாற்றியவராவார். தொடர்ந்து இவர் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக பிரதிப்பணிப்பாளராகக் கடமையாற்றி வந்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கலாபீடத்தின் கல்வித்துறைக்கு பொறுப்பான பணிப்பாளராக உஸ்தாத் ஸீ. ஐயூப் அலியும் நிர்வாகத்துறைக்குப் பொறுப்பான செயலாளராக ஜனாப் எம்.ஐ.ஏ. இம்தாத் அலியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனங்களும் பரிபாலன சபைத் தலைவரால் வழங்கி வைக்கப்பட்டன.
இஸ்லாமிய கற்கைகள் நெறிகள் பீட பீடாதிபதியாக அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீளும் கல்வி, தர உத்தரவாதப் பிரிவு தலைவராக கலாநிதி அஷ்ஷெய்க் ஹாரிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர் நலன் பிரிவுத் தலைவர் அஷ்ஷெய்க் கமருஸ்ஸமான், பரீட்சைகள் பிரிவுத் தலைவர் அஷ்ஷெய்க் ஸைனுல் ஹுஸைன், அறபு மொழி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஏ.பீ.எம் அப்பாஸ், அடிப்படைக் கற்கைகள் நிலையத் தலைவர் அஷ் ஷெய்க் இம்தியாஸ், பிரதம நூலகர் அஷ்ஷெய்க் பஹ்ரி ஆகியோர் தத்தமது பதவிகளில் தொடர்ந்தும் கடமையாற்றுவர் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
ஐந்து பேர் அடங்கிய ஒரு நிர்வாக கவுன்ஸிலும் உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் இயங்கும் இந்த கவுன்ஸிலில் முகாமைத்துவ சபை சார்பில் பொருளாளர் அல்ஹாஜ் ரியாழ் யாகூப் அவர்களும் செயலாளர் அஷ்ஷெய்க் நஜ்மான் ஸாஹித் அவர்களும் உள் நிர்வாகம் சார்பில் கல்வித் துறைப் பணிப்பாளரும் நிர்வாகத்துறை செயலாளரும் அங்கம் வகிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய பதவியேற்பு வைபவத்தில் கலாபீடத்தின் பரிபாலன சபை, முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், விரிவுரையாளர்கள்,உத்தியோகஸ்தர்கள் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் கலாபீடத் தலைவரது உரையும் முதல்வரின் பதவியேற்பு உரையும் இடம் பெற்றன. கலாபீடத்தின் புதிய நிர்வாக ஒழுங்கள் தொடர்பிலும் முதல்வர் விரிவாக விளக்கினார்.
வல்ல றஹ்மான் இந்த நிறுவனத்தை ஸ்தாபித்தவர்களுக்கும் இதற்காக இன்று வரை உழைப்பவர்களுக்கும் பேரருள் புரிவானாக!