பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று மாலை புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினர் மற்றும் தமிழ் – முஸ்லிம் மக்கள் எனப் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நேற்று காலை அநுராதபுரத்தில் நடைபெற்றது. இதில் பௌத்த பிக்குகளும், சிங்கள மக்களும் பங்கேற்றிருந்தனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து புத்தளம் முந்தல் பகுதியில் பகுதியிலும் இந்த கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. மேலும், குருநாகல், காங்கேசன்துறை அம்பாந்தோட்டை பகுதிகளிலும் இந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டை இடம்பெறுகின்றது.
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை இன, மத மற்றும் பாலியல் சிறுபான்மையினர், கைதிகள் மற்றும் தொழிலாளர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்கள், மற்றும் மாணவர் ஆர்வலர்கள், தொழிற்சங்கவாதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட மாற்றுக்கருத்துக்கள் உள்ளோர் உட்பட அனைத்து மக்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் இதன்போது கருத்து தெரிவித்தார்.