இலங்கையும் தொடர்ந்து காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நாடாக இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இலங்கையில் காலநிலை மாற்ற செயலகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தனவின் மேற்பார்வையின் கீழ் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும், எதிர்கால காலநிலை சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் உலகில் பல நாடுகள் இவ்வாறான செயலகங்களை நிறுவியுள்ளதாகவும், எதிர்கால காலநிலை சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் அந்த நாடுகளும் நிதி சேகரித்துள்ளதாக ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் காலநிலை சவால்களுக்கு முகங்கொடுக்கும் திட்டங்களை தயாரிப்பதே இந்த செயலகத்தை நிறுவியதன் முக்கிய நோக்கமாகும்.
இலங்கையில் காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை மாற்றத்தை கையாள்வதற்கான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் தயாரித்து நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானித்துள்ளதுடன், இந்த செயற்பாடுகளும் இந்த செயலகத்தினால் மேற்கொள்ளப்படும்.
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட எரிக் சொல்ஹெய்ம் ஆகியோர் காலநிலை மாற்ற செயலகத்தின் பணிகளுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை எகிப்தில் நடைபெறவுள்ள (COP 27) உலக காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில், இலங்கையில் நிறுவப்படவுள்ள காலநிலை மாற்ற செயலகம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து தெரிவிக்கவுள்ளார்.