தமிழ் சிறுபான்மையினரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொண்டுள்ள முன்னேற்றம் போதுமானதாக இல்லை என ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தின் மீது இந்தியாவின் வாக்கெடுப்பு குறித்து விளக்கியபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான நீடித்த மற்றும் பயனுள்ள தீர்வைக் கண்டறிவதில், சமத்துவம், நீதி, கண்ணியம் மற்றும் சமாதானம் மற்றும் ஐக்கியம், பிரதேச ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகிய தமிழர்களின் அபிலாஷைகளுக்கு ஆதரவளிக்கும் இரண்டு அடிப்படைக் கொள்கைகளால் இந்தியா எப்போதும் வழிநடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, 13ஆவது அரசியல் சட்ட திருத்தத்தை அமல்படுத்துதல், மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்துதல் ஆகிய வாக்குறுதிகளை இலங்கை அரசு அளித்திருப்பதை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.
இவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் போதுமானது அல்ல. இந்த வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற இலங்கை பாடுபட வேண்டும். இலங்கை தமிழர்களின் சட்டபூர்வ உணர்வுகளை நிறைவேற்றுதல், அனைத்து இலங்கை மக்களின் வாழ்க்கையை செழிப்பாக்குதல் ஆகியவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
இவற்றை அடைய இலங்கை அரசுடனும், சர்வதேச சமூகத்துடனும் இந்தியா இணைந்து செயல்படும். இலங்கையின் அமைதி, நல்லிணக்கத்துக்கு நிரந்தர தீர்வு காண தமிழர்களின் உணர்வுகளை ஆதரித்தல் என்ற கொள்கைப்படி இந்தியா செயல்படும்.
இலங்கையின் அண்டை நாடு என்ற முறையில், 2009-ம் ஆண்டுக்கு பிறகு அங்கு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் பணிகளுக்கு இந்தியா உதவி செய்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் உதவி செய்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்தும் தீர்மானத்திற்கு வியாழனன்று இந்தியா புறக்கணித்தது, ஆனால் தமிழ் சிறுபான்மையினருக்கான கடப்பாடுகளை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது.