புத்தளம், மணல்குண்டுவ பிரதேசத்தில் மாணவி ஒருவர் பாடசாலையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாடசாலை மணியடித்ததையடுத்து சமய அனுஷ்டானத்திற்காக வகுப்பறையில் இருந்து விளையாட்டு மைதானத்தை நோக்கி ஓடும் போது சிறுமி தரையில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மணல்குண்டுவ பகுதியைச் சேர்ந்த மொஹமட் பைசர் பாத்திமா ரஹ்னா என்ற 12 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
11 குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில் அவர் 9 வது குழந்தை என்று கூறப்படுகிறது.
சிறுமி ஓடும் வேளையில் சுருண்டு விழுந்து அதேநேரம் சுயநினைவின்றி இருந்ததாகவும் கூறப்படுகின்றது. அதிபரும் ஆசிரியர்களும் செயற்கை சுவாசம் கொடுத்து உயிர்பிழைக்க முயற்சித்த போதும் சிறுமி சுயநினைவின்றி இருந்துள்ளார்.
சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
சிறுமிக்கு இதற்கு முன் எந்த நோயும் ஏற்படவில்லை என்றும், நலமுடன் இருந்ததாகவும் குடும்பத்தினரின் உறவினர்கள் கூறுகின்றனர்.