மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியை குறித்த காலத்திற்குள் முடிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும்: ஜனாதிபதி

Date:

இலங்கைப் பல்கலைக்கழக அமைப்பில் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படுவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்பட்டு மாணவர்களுக்கு குறித்த காலத்திற்குள் கல்வியை முடிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் மாணவர் தலைவர்களுடன் நேற்று  ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரியின் விவகாரங்கள் மற்றும் நாட்டின் கல்வித்துறையின் நிலை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக மாணவர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி பதிலளித்தார்.

பல்கலைக்கழக கல்வி குறித்து மாணவர்களிடம் கேட்கப்பட்டதுடன், வெளிநாட்டு உயர்கல்வியில் பட்டம் பெற எடுக்கும் நேரத்திற்கும் உள்ளூர் பல்கலைக்கழகத்தில் எடுக்கும் நேரத்திற்கும் அதிக வித்தியாசம் இருப்பதாக மாணவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அதற்கான முறையான தீர்வு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், வெளிநாட்டுக் கல்வியை விட உள்ளுர் பல்கலைக்கழக கல்வியின் பெறுமதியை வலியுறுத்திய ஜனாதிபதி, பாடசாலைக் கல்வியை முடித்து உயர்கல்விக்கு தகுதி பெறும் மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மேலும் குருநாகல், மட்டக்களப்பு உள்ளிட்ட புதிய பல்கலைக்கழகங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை தனியான வளாகமாக மாற்றுவதுடன், தேசிய வணிக முகாமைத்துவ பாடசாலை (NSBM) மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவகம் (SLIIT) ஆகியவற்றுக்கு தேசிய பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக புதிய மாணவர்களின் சித்திரவதைகள் தொடர்பில் மாணவர்களிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, றோயல் கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி, ஆனந்த கல்லூரி, டி.எஸ். சேனநாயக்க வித்தியாலயம் போன்ற கொழும்பு பாடசாலைகளில் இருந்து வருடாந்தம் அதிகளவான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படுகின்ற போதிலும், புதிய மாணவர்களின் சித்திரவதைகள் தொடர்பில் அவர்கள் மௌனம் காப்பதாகக் கூறப்படுகின்றது.

புதிய மாணவர்களின் சித்திரவதைகளை தடுக்கும் கடமை பாடசாலைகளுக்கு இருப்பதாகவும், அதற்காக பாடசாலை அதிபர்கள் தமது பாடசாலை நாட்களிலிருந்தே பொறுப்பான சில பணிகளை செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழக கல்வி மிகவும் அழகானது எனவும், புதிய மாணவர்களின் சித்திரவதைகளினால் மாணவர்கள் உடல் மற்றும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் நிலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான தீர்வுகளை முன்வைக்க தாம் செயற்பட்டு வருவதாகவும் வலியுறுத்தினார்.

றோயல் கல்லூரியின் அபிவிருத்திக்காகவும் கல்லூரியின் நற்பெயருக்காகவும் மாணவர் தலைவர் சபை ஆற்றிய பங்களிப்பையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராட்டினார்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...