நேற்று கோலாகலமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட பிஃபா கத்தார் உலகக் கோப்பை தொடக்க விழாவில் சவூதி, துருக்கி, எகிப்து, கத்தார் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதற்கமைய கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்-தானிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இதன்போது, நான் உங்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது, எனக்கும் என்னுடன் வந்த பிரதிநிதிகளுக்கும் கிடைத்த அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது ஆழ்ந்த நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிஃபா உலகக் கோப்பையை வெற்றிகரமாக தொடங்கியமைக்காக நான் உங்களை வாழ்த்துகிறேன் என்றும் பட்டத்து இளவரசர் கத்தார் தலைவருக்கு தெரிவித்தார்.
முன்னதாக உலகக் கோப்பையை நடத்துவதற்கு கத்தாருக்குத் தேவையான கூடுதல் ஆதரவு அல்லது வசதிகளை வழங்குமாறு அனைத்து சவூதி அமைச்சகங்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் இளவரசர் உத்தரவிட்டிருந்தார்.
பல ஆண்டுகளாக அரசியல் தகராறில் இருந்த கத்தார் மற்றும் சவூதி இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டிருந்தது மட்டுமன்றி இது பற்றி கருத்து தெரிவித்த உலமாக்கள் பலர் சிறைகளில் இன்றும் இருக்கின்ற நிலையில், இவர்களுக்கிடையிலான உறவு எவ்வளவு தூரம் மீண்டும் பலமடைந்துள்ளது என்பதை இந்த சந்திப்பின் மூலம் எடுத்துக் காட்டுகிறது.
சிரியாவின் உள்நாட்டுப் போரின் ஆரம்பத்தில் நிதியுதவி பெற்ற குழுக்கள் தீவிரவாதிகளாக குற்றம்சாட்டப்பட்டதை தொடர்ந்து கத்தார், மேற்கு நாடுகளின் விமர்சனத்தையும் எதிர்கொண்டது.
ஹிலாரி கிளிண்டன் முதல் டொனால்ட் டிரம்ப் வரை அமெரிக்க அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதிலும் இருந்து விமர்சனங்கள் இருந்தபோதிலும், தீவிரவாதிகளுக்கு நிதியளித்ததை கத்தார் தொடர்ந்து மறுத்து வந்தது.
இச்சூழ்நிலையில், உலகக் கோப்பை அங்குரார்ப்பண நிகழ்வில் மேற்படித்தலைவர்கள் பங்கேற்று தமது உறவை மீண்டும் பலப்படுத்திக்கொள்ளும் வகையில், கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
எகிப்து ஜனாதிபதி சி.சி, துருக்கி ஜனாதிபதி அர்தூகான், ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ், முன்னாள் கட்டார் அமீர் ஷேக் ஹமத் ஆகிய தலைவர்களும் இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர்.